பக்கம்:கவிதையும் வாழ்க்கையும்.pdf/200

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மனித வாழ்க்கை

201


அமைத்துக் கொண்டிருக்க இடமில்லை. கூடி வாழ வேண்டும் என்ற மனப்பான்மையே அவனுக்கு அப்போது தோன்றியிராது. இன்று, அவன் ஒரு சமுதாயச் சார்பான விலங்காய் இருந்தாலும், அந்த ஆதி நாளில், அவன் சமுதாயம் என்பதையே அறியாதிருந்தான். ஆடையால் தன்னை மறைக்க வேண்டும் என்ற உணர்வோ, அறிவால் தன்னைத் துலக்க வேண்டும் என்ற நிலையோ, அந்த நாளில் அவனுக்கு இல்லை. எப்படியோ விலங்கினத்திலிருந்து தான் வேறுபட்டவன் என்ற உணர்வு சிறுகச்சிறுக அவனுக்கு உண்டாயிருக்கும். அந்த உணர்வு அரும்பிப் பூத்துக் காய்த்துக் கனியான காலம் எத்தனை எத்தனை ஆயிரம் ஆண்டுகளோ! யாமறியோம்! பகலெல்லாம் எங்கோ சுற்றித் திரிந்து, இரவெல்லாம் மிருகங்களைப் போன்று எங்கோ குகையிடை முடங்கிக் கிடந்திருப்பான் அந்த ஆதி மனிதன். அப்போது அவனுக்குத் தான் உயிரினத்தின் உச்சத்தில் இருப்பவன் என்பதும், தானே மற்ற உயிர்களை யெல்லாம் அடக்கியாள முடியுமென்பதும், தன் வாழ்வே சமுதாய வாழ்வாக அமையும் என்பதும் எப்படித் தெரியும்? பாவம்! அவன் விலங்கோடு விலங்காய். ஆனால் ஏதோ புது உணர்வு தோன்றிய ஒருவனாய், வாழ்ந்திருக்கவேண்டும்.

காலம் பல கழிந்து அவன் மனம் அவனுக்கு ஒன்றன்பின் ஒன்றாகப் பல உண்மைகளை உணர்த்தியிருக்கும். மனித வரலாற்றுக் காலத்தை, வரலாற்று ஆசிரியர்கள் பலப்பல வகையாகப் பிரித்திருக்கிறார்கள். கற் காலம், இரும்புக் காலம், செம்புக் காலம் என்று, அவன் வாழ்ந்த காலத்தை யெல்லாம் கணக்கிட்டிருக்கிறார்கள். எனினும், அக்காலங்களுக்கு முன் எல்லாம் அவன் வாழ்ந்துதான் இருக்கிறான் என்பதையும் உணரவேண்டும். உணர்ந்த வரலாற்று ஆசிரியர்கள், ‘வரலாற்றுக் காலத்துக்கு முற்பட்ட மனிதன்’ என்று அவனைப் பற்றிக் கூறியுள்ளார்கள். எனவே, வரலாற்று எல்லையைக் கடந்தும் அவன் வாழ்ந்தான் என்பது தெளிவு.

உடலால் வேறுபட்டது போன்று, உள்ளத்தாலும் வேறுபட்ட மனிதன், அந்த உள்ள உணர்ச்சிவழி சிந்திக்கத்

க. வா.-13