பக்கம்:கவிதையும் வாழ்க்கையும்.pdf/205

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

206

கவிதையும் வாழ்க்கையும்



அறிஞரான லாம்பு'[1] என்பவர் சீன மக்களின்மேல் வைத்து எப்படி மனிதன் முதல் முதல் நெருப்பில் மாமிசத்தைப் பொசுக்கிச் சுவை பார்க்கக் கற்றுக்கொண்டான் என்பதைக் காட்டுகின்றார். ஏதோ எதிர்பாராத விதமாக, வாழ்ந்த குடிசை பற்றிக்கொள்ள, அதில் அகப்பட்ட பன்றிக்குட்டிகள் இறந்தனவாம். அவை அப் பெருநெருப்பில் நன்கு வெந்தன போலும்! அவற்றை எடுக்கப் பையன் அவற்றைத் தொட்டான். உடனே சூடு அவன் விரலைச் சுவை பார்த்தது; அச் சூட்டைப் பொறானாய் விரலை வாயில் வைத்தான். அந்தப் பன்றியின் இறைச்சி விரலில் பட்டிருக்க வேண்டும். அது வாயில் பட்டவுடனே மிகவும் உருசியாக இருக்க அப்படியே அதை முழுதும் சுவைத்துத் தின்றானாம். பின்னர் அது அவன் அப்பனுக்கு, ஊராருக்கு, நீதிபதிக்கு, பின்னர் நாட்டிற்குப் பரவிற்றாம். 'லாம்பு' இதைக் கதையை வேடிக்கையாகக் கூறின போதிலும், இது அப்படியே நடந்த ஒன்று அன்று என்றாலும், மனிதன் நெருப்பினைத் தன் உணவுப் பொருளுக்குப் பயனபடுத்தியது திடீரென ஒரு வகையிலேதான் அமைந்திருக்க வேண்டும் என்பதை விளக்க வரும் ஒரு சான்றா யமைகின்ற தன்றோ? ஆய்ந்தோய்ந்து அமைந்த பின்னரே அதை அவன் பயின்றான் என்று கொள்ளுதல் இயலாது. எப்படியோ நெருப்பினை உண்ணும் உணவு ச்மைக்கப் பயன்படுத்திக் கொண்டான் மனிதன். ஆனால், நெருப்பு அவனுக்கு அதற்கு முன்னும் பயன்பட்டிருக்க வேண்டும். அவன் வாழும் குகையிலோ, குடிசையிலோ அவன் கண் உறங்கும் இராக்காலத்து வேற்று மனிதரும் விலங்கும் வாராதிருக்க, வாயிலும் கதவும் அமைக்கக் கற்றுக் கொள்ளாத முன், இந்நெருப்பினைத் தடை யாக மூட்டித் தன்னைப் பாதுகாத்துக் கொண்டிருக்கலாம். எப்படியோ நெருப்பு அவன் வாழ்வில் நெடுங்காலத்துக்கு முன்பே இன்றியமையாத பொருளாகிவிட்டது. கற்காலத் தைப் போன்றே அவன் வாழ்க்கை வரலாற்றில் நெருப்புக்காலம் என்ற ஒன்று இருந்திருக்க வேண்டும். நிலமும், நீரும்,

  1. 1. Lamb