பக்கம்:கவிதையும் வாழ்க்கையும்.pdf/206

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மனித வாழ்க்கை

207



காற்றும் அதற்கு முன்பே அவன் வாழ்வில் பின்னிப் பிணைந்தன. -

காட்டிலும் குகையிலும் தனித்தனியாய் வாழ்ந்த மனிதர்கள் ஒருவரை ஒருவர் க்ண்டிருப்பார்கள். உருவத்தாலும் பிற அமைப்புக்களாலும் அவர்கள் தம்முள் ஒத்தவர் என்ற உணர்வு பிறந்திருக்கும். எனவே, ஒருவரோடொருவர் கலந்திருக்க வேண்டும். அப்படிக் கலக்கும்போது, அவர்கள் எந்த மொழியைப் பேசினார்கள் என்பதை நாம் அறியோம். நல்ல காலமாக அவர்கள் காலத்தில், இன்றைய நாகரிக உலகத்தில் காணும் மொழி வெறியும், காழ்ப்பும், பொறாமையும், வஞ்சகமும் நிச்சயம் இருந்திரா. எடுத்த எடுப்பிலேயே அவர்கள் ஏதாவது திருந்திய ஒரு மொழியைப் பேசினார்கள் என்று கூறிவிட முடியாது. அவர்கள் பேச்சு வெற்று ஆரவாரமாகத்தான் இருந்திருக்கும். விலங்குகளும் பறவைகளும் கத்துவதையும் கீச்சிடுவதையும் அவர்கள் கேட்டும் கண்டும் இருப்பார்களல்லரோ? அவற்றைப் போன்று தாமும் தத்தம் கருத்துக்களை வெளியிட ஓசைக் குறியீடுகளை வைத்துக்கொண்டு மிகு நெடுங்காலம் வாழ்ந்திருக்கவேண்டும். ஓசையும் ஒலியும் அவர்தம் வாழ்வில் பிற பொருள்களைப் போன்று இன்றியமையாதனவாகிவிட்டன. ஒரு காலத்தில், எப்படியோ ஒருவரை ஒருவர் கலந்து அறிந்து கொண்டபின், அந்த ஓசைக்கும் ஒலிக்கும் உருவம் கொடுத்திருப்பார்கள். பின்பு அவர்கள் கலந்து பிரிந்து உலகின் பல பாகங்களிலும் சென்று சேர்ந்தபோது, அவர்தம் மொழிகள் பலப்பலவாகப் பெருக ஆரம்பித்திருக்க வேண்டும். அவற்றைப் பற்றிப் பின்னே காண்போம்.

தனித்து வாழ்ந்த மனிதன் சேர்ந்து வாழவேண்டும் என்று கருதியிருப்பான். அதற்கேற்ற இடங்களை நாடியிருப்பான். கொடிய காட்டு விலங்குகளோடு விலங்காகக் காட்டில் வாழ்வதிலும், சற்றுப் பரந்துள்ள சமவெளிகளின் மேட்டு நிலங்களில் வீடுகள் கட்டிக்கொண்டு வாழ அம்மனிதன் மற்றவரோடு திட்டமிட்டிருப்பான். நல்ல குடிநீரும், பிற வசதிகளும்