பக்கம்:கவிதையும் வாழ்க்கையும்.pdf/207

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

208

கவிதையும் வாழ்க்கையும்



பெருகியுள்ள நதிக்கரைகளைத் தனக்கு வாழ்க்கையிடமாக அவன் அமைத்துக் கொண்டிருப்பான். அதனாலேதான் உலகத்தின் நாகரிக வளர்ச்சியை ஆராயும் ஆராய்ச்சியாளர்கள், 'நாகரிகங்கள் நதிக்கரைகளில் வளர்ச்சி அடைந்தன', என்று கூறுகின்றார்கள். எகிப்திய நாகரிகம் நைல் நதியைச் சுற்றிய சமவெளியில் உருவாகிய ஒன்றன்றோ? சிந்து சமவெளி நாகரிகமும், காவிரிக் கரை நாகரிகமும், மெசபடோமிய நாகரிகமும், சுமேரிய நாகரிகமும், சீன நாகரிகமும் அனைத்தும் ஆற்றை அடுத்து வளர்ந்த நாகரிகங்கள் தாமே! அவ்வந் நிலப்பரப்பில் அன்று ஓடி வளம்பெருக்கிய பேராறுகள் இன்றும் வற்றாது வளஞ்சுரக்கின்றனவன்றோ? இன்றைய உலக நாகரிகங்கள் அனைத்தும் அவ்வாறே ஆற்று வழி அமைந்தன என்பர் ஆய்வாளர்.

காட்டிலும் மலையிலும் வாழ்ந்த மனிதன் ஆற்றங்கரைக்கு வாழ வந்தான். அங்கேதான் அவன் வாழ்க்கை செம்மைப் பட்டது என்று கூறலாம். கண்டதைத் தின்றவன், அந்த உணவுப் பொருளை நெருப்பிலிட்டுப் பொசுக்கி உண்ணக் கற்றுக்கொண்டதோடு அமைந்து நின்றிருக்க மாட்டான். ஆற்றங்கரையில் வந்து, அமர்ந்ததும் அவன் அறிவு வேலை செய்யத் தொடங்கியிருக்கும். கரை புரண்டு ஓடும் வெள்ளம், பக்கத்தில் ப்ரந்து கிடக்கும் சமவெளி, அவ்வெளியில் பரந்து வளர்ந்து கிடக்கும் பசும்புல், அவற்றை மேயவரும் ஆடு மாடுகள், இவை அனைத்தும் அவன் சிந்தனையைக் கிளறி விட்டிருக்கும் என்பதில் ஐயமில்லை. அந்தப் பொருள்களையெல்லாம் எண்ணி எண்ணி, ஆராய்ந்த உள்ளத்தின் வழியே தான் அவன் உழவுத் தொழிலை அறிந்திருக்க வேண்டும். பரந்த வயல் வெளிகளும், பாய்ந்து வரும் வெள்ளமும், உழப் பயன்படும் மாடும் பிறவும், அவனுக்கு ஊக்கம் அளித்திருக்க வேண்டும். அவற்றின் வழியே அவன் நிலத்தை உழுது பயிர் செய்யக் கற்றுக்கொண்டான். அதனால் பெறும் தானியங்களைத் தனக்கு உணவுப் பொருளாகச் சேமித்து வைத்துக் கொண்டான். சில நாள் வருந்திப் பாடுபட்ட போதிலும், சில