பக்கம்:கவிதையும் வாழ்க்கையும்.pdf/208

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மனித வாழ்க்கை

209



நாள் அமைதியாக இருக்கும் வாழ்வு அவனுக்கு அதன்மூலம் கிட்டிற்று. அவனுக்கென்று மாடும் செல்வமும் வயலும் வளனும் சொந்தமாயின. முதலில் ஒரு சிலரே இத் துறையில்’ ஆற்றங்கரைகளில் குடியேறிப் பாடுபட்டுப் பயனடைந்திருப்பர். பின்னர், காலம் செல்லச் செல்ல, பல்லோர் அந்த இடங்களைத் தேடிப் பிடித்து, உழைத்து, அமைதியான வாழ்வில் தமக்கும் பங்கு உண்டு என்பதை நிலை நாட்டி, நாடுகளையும் நகரங்களையும் உண்டாக்கியிருப்பர். அவர்தம் அரும்பெரு முயற்சிகளையும், செயல்களையும் நாடு நகரங்களையும் அவ்வப்போது பெரு வெள்ளங்கள் சீற்றம் மிகுந்து, அளவு கடந்து அழித்து, நிலை குலையச் செய்து விட்டபோதிலும், அவை-மறைந்தவையும் எஞ்சி வாழ்பவையும்-இன்றும் மனிதனது நாகரிக வளர்ச்சியைக் காட்டிக் கொண்டிருக்கின்றன. காவிரிப்பூம்பட்டினம் கடலால் கொள்ளப்பட்ட போதிலும், அதன் நாகரிகத்தையும் பிற நலத்தையும் நாடு மறக்கவில்லை. சிந்துவெளி நாகரிகத்தின் சின்னமாக மொகஞ்சதாரோ ஆரப்பா போன்ற நகரங்கள் மீண்டும் நிலமிசை அகழ்ந்தெடுக்கப்பட்டு வரலாற்றை விளக்குகின்றன. இப்படியே பிற நர்ட்டு ஆற்றங்கரை நாகரிகங்களும் இன்றளவும் வாழ்கின்றன.

காடும் மலையும் ஆற்றங்கரையும் மட்டுமன்றிக் கடற் கரைகளும் மக்கள் வாழ்விடங்களாய் அமைந்தன. பல பெரிய பட்டினங்கள் கடற்கரையில் அமைந்திருந்தன. இன்றும் உலகில் சிறந்தோங்கும் பட்டினங்களில் பலவும் கடற்கரையை ஒட்டியே அமைந்துள்ளன. நில வளத்தையும், காட்டின் இயற்கை வளத்தையும், மலை வளத்தையும் பெற்ற மக்கள். கடல் வளத்தையும் தமக்கு உரிமையாக்கிக்கொள்ளத் தயங்க வில்லை. அக் கடலில் உள்ள மீன்களையும் மணிகளையும் அவர்கள் கட்டு மரங்கள் மூலம் கடலில் சென்று, சேர்க்கத் தலைப்பட்டார்கள்: சேர்த்து நிலத்துக்குக் கொண்டு வந்து மாற்றுப் பண்டங்களாக விற்பனை செய்தார்கள். விற்பனை என்பது மனித வளர்ச்சியில் நெடுங்காலத்திற்குப் பின்னர் ஏற்பட்ட ஒன்று. தன் முயற்சியாலும் உழைப்பாலும் பெற்ற பொருளைக்