பக்கம்:கவிதையும் வாழ்க்கையும்.pdf/209

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

210

கவிதையும் வாழ்க்கையும்



கொண்டு வாழ்ந்த முன்னைய மனிதன், அப்பொருள் தன்னிடம் தன் தேவைக்கு மேலே இருந்திருக்குமாயின், அதை மற்றவர்களுக்கு வாரி வழங்கியிருப்பான். பின் ஒரு காலத்தில் அப் பொருளை மற்ருெருவரிடம் கொடுத்து, அதற்கு மாறாக அவரிடம் உள்ள தனக்குத் தேவையான வேறொரு பொருளைப் பெற்றிருப்பான் அவன். அதுவரையில் அவனுக்குத் தன் தேவைக்குமேல் சேர்க்கவேண்டும் என்ற எண்ணம் உண்டாகா திருந்திருக்கும். ஆயினும், காலமும் கருத்தும் வளரவளரத் தனக்கும் தன் குடும்பத்துக்கும் ஏதாவது சேர்த்து வைக்க வேண்டும் என்ற எண்ணத்திலே, தன் தேவைக்கு அதிகமான பொருளை ஏதாவது ஒரு விலைக்கு விற்க முனைந்திருப்பான். தன்னலம் என்ற உணர்ச்சி உருவான காலத்திலே அந்த விற்பனையும் உருவாகியிருக்கவேண்டும். 'மனிதன் தோன்றிய நாளிலே தன்னலம் இல்லையா?' என்ற கேள்வி எழும். அக் காலத்தில் அவனுக்குத் தன்னலம் என்ற உணர்வு ஒரு வழியில் அமைந்தது என்றாலும், அத் தன்னலம் மற்றவரிடமிருந்து தன்னைக் காப்பாற்றிக்கொள்ள வேண்டும் என்ற அந்த அளவுக் \குத்தான் இருந்திருக்கும். பாம்பு முதலியனவும் பிற விலங்குகளும் தம்மைப் பாதுகாத்துக் கொள்வதற்கே-தற்காப்புக்காகவே-விஷம், நகம், பல் முதலியவற்றைப் பெற்றிருக்கின்றன என்பார்கள். அதுபோலவே, ஆதிமனிதன் மற்றவற்றிலிருந்து தன்னைக் காப்பாற்றிக்கொள்ள வேண்டும் என்ற அந்த அளவுக்குத் தன்னலக்காரனா யிருந்திருப்பான்; ஆனால், நாளாக ஆக, மற்றவரை மறந்து தானே வாழவேண்டும் என்ற தன்னலம் எப்படியோ அரும்பிவிட்டது. அப்போதுதான் தேவைக்குமேல் சேர்க்கவேண்டுமென்ற மனப்பான்மையும், பொருளாதார ஏற்றத் தாழ்வும், பிற வேறுபாடுகளும் மனிதன் வாழ்வில் தோன்றிவிட்டன. அவை என்று தோன்றினவோ அன்றுதொட்டு இன்றுவரை, மனிதன் பேய்போல அலைந்து கொண்டே இருக்கிறான். இது நிற்க. -

மனிதன் தன் உணர்வு பெற்றபின் நிலத்தின் பல பாகங்களிலும் பிரிந்து சென்று வாழக் கற்றுக்கொண்டான்