பக்கம்:கவிதையும் வாழ்க்கையும்.pdf/210

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மனித வாழ்க்கை

211



என்றல்லவா குறித்தோம்? அவ்வாறு பிரிந்து வாழ்ந்தவர்கள் அங்கங்கேயே தங்கிவிட்டார்கள். அவரவர் சுற்றுச் சார்புகளும் பிற பண்பாடுகளும் அவரவர்களை வெவ்வேறு வழியில் இழுத்துச் சென்றுவிட்டன எனலாம். மலையில் வாழ்ந்தவன் அம் மலையின் சார்புக்கு ஏற்பத் தன் உணவு, உடை, வாழ்க்கை, முறை முதலியவற்றை அமைத்துக்கொண்டான். காட்டில் வாழ்பவனோ, தன் சுற்றுச் சார்புக்கு ஏற்பக் கொடிய விலங்கு களை வேட்டையாடியும், வேறு வகையான சார்புகளுக்கு ஏற்பவும் வாழப் பழகிவிட்டான். ஆற்றங்கரையில் வாழ. வந்தவனே, அதன் சுற்றுச் சார்புகளுக்கு ஏற்ப, வயலில் உழுது வளம் பெருக்கி, மாட்டுச் செல்வத்தையும் பிற செல்வங்களையும். வளர்த்து, நாடு நகரங்களையும் அமைத்து, நலம் பெருக்கிக் கொண்டான். அதைப் போன்றே கடற்கரையில் வாழ்ந்த அந்த மனிதனும் கொந்தளிப்புக்கும் கொடுஞ் சூறாவளிக்கும் அஞ்சாது, கடலில் பாய்ந்தும் பிறவாறும் தன் வாழ்வை வரையறுத்துக் கொண்டான். இப்படித்தான் மக்கள் வாழ்க்கை உலகில் மலர்ந்திருக்க வேண்டும். இந்த வாழ்க்கையைத்தான் தமிழ்க் கவிதைகள் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் என்று நான்கு வகையாகப் பாகுபடுத்திப் பாராட்டி அவற்றில் மக்கள் வாழ்ந்த வாழ்வையெல்லாம் காட்டுகின்றன. அவற்றின் விரிவையெல்லாம் பின்னர் விளக்கமாகக் காண்போம்.

உலகின் பல பாகங்களிலும் பிரிந்து நின்று வாழ்வை அமைத்துக்கொண்ட மக்கள், தத்தம் கருத்தை உணர்த்தப் பேசிய மொழி எது? எல்லோரும் ஒரே ஆதி மனிதனிடத்திலிருந்துதான் தோன்றினார்களென்றால், அந்த ஆதி மனிதன் பேசிய மொழியைத்தானே இவர்களெல்லாரும் பேசியிருக்க வேண்டும்? "ஆம்" என்று சுருக்கமாகப் பதில் சொல்லிவிடலாம். ஆனால், இன்றைய உலகில் ஒரே மொழியா பேசப்படுகின்றது? இப் பாரத நாட்டில் மட்டும் பல்வேறு மொழிகள் - சில திருந்தியனவாயும், பல திருந்தாதனவாயும்-எத்தனையோ மொழிகள் பேசப்படுகின்றனவே! உலக முழுவதிலும் நூற்றுக்கு மேற்பட்ட மொழிகள் உள்ளனவே! மொழிகள் மட்டுந்தானா!