பக்கம்:கவிதையும் வாழ்க்கையும்.pdf/213

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

214

கவிதையும் வாழ்க்கையும்


 கொண்டே வரும் மொழிகள் ஒரு சிலவே. அவற்றுளெல்லாம். தமிழ் மொழி தலை சிறந்து விளங்குகின்றது என்று கூறினால், அது தற்பெருமையாகாது. உண்மை இது என்பதை மொழி நூற்புலவர்கள் நன்கு உணர்வார்கள். அத்தகைய மொழிகள் வளர எத்தனையோ ஆயிரம் ஆயிரம் ஆண்டுகள் கழிந்திருக்க வேண்டும். மனிதன் மிருகமாகத் தனித்தனி வாழாது, சமுதாயமாகச் சேர்ந்து வாழ வழிசெய்த ஒன்று நம் மொழிதான். தங்களுக்குள் அமைந்த கருத்தைப் பரிமாறிக்கொள்ள உதவிய இந்த மொழியின் வளர்ச்சி, மனித இனத்தின் வளர்ச்சியை விட்டுப் பிரிக்க முடியாத ஒன்று. மொழிகள் இன்று ஒருசேர அழிந்தன என்னும் நிலை எதிர்பாராது உண்டாயின், அப்போதே மனித இனம்-மனித சமுதாயம்இல்லை என்றுதான் கொள்ளவேண்டும். எனவேதான், மனித வாழ்க்கையில் மொழியும் இடம் பெறுகின்றது. எத்தனையோ காலம் பேச்சுவழக்கில் இருந்த மொழிகள், காலப் போக்கில் எழுத்தில் வரலாயின. ஒரே மொழியில் எழுத்துக்கள் காலப் போக்கில் மாறியுள்ளன. எழுத்துக்கள் உண்டானபின் எத்தனையோ ஆண்டுகள் கழித்தே இலக்கியம் தோன்றியிருக்க வேண்டும். இவற்றை யெல்லாம் வைத்து நோக்கும்போது சுமார் 5000 ஆண்டுகளுக்கு முன் தொல்காப்பியம் காட்டியபடி திருந்திய இலக்கியமும் இலக்கணமும் நாட்டில் தோன்றிச் சிறந்திருந்தனவென்றால், அதற்கு முன் எத்தனை எத்தனை ஆண்டுகளாகத் தமிழ் மொழி தோன்றி வளர்ந்து சிறந்திருக்க வேண்டும் என்பது புலனாகும். இதுபோன்றே உலகில் தோன்றிய பிற மொழிகளுள் சிலவும், கால எல்லையைக் கடந்து மனித இனத்தோடு வளர்ந்துகொண்டே வருகின்றன. இன்று அம் மனித இன் வாழ்வை அறிந்துகொள்ள வேறு பல பொருள்கள் உதவுகின்றன என்றாலும், அம் மொழிகளின் வழி எழுந்த இலக்கியங்களே பெரும்பாலும் உதவுகின்றன எனலாம். சிறப்பாக, நம் தமிழ் நாட்டில் வாழும் இலக்கியங்களே இன்று நம்முன் பண்டைத் தமிழர்தம் வாழ்வு, கலை, செல்வம், நாகரிகம் முதலிய அனைத்தையும் கொண்டுவந்து நிறுத்துகின்றன. அத்தகைய மொழிகள்-மனித வரலாற்றில் பின்னிக்