பக்கம்:கவிதையும் வாழ்க்கையும்.pdf/214

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மனித வாழ்க்கை

215


 கிடக்கும் மொழிகள்-மேலும் சிறக்க என வாழ்த்துவோம்!

மொழியைப் போன்றே மனித வாழ்வில் கலந்துள்ளது நாகரிகம் என்பது. நாகரிகம் என்பது வெறுந் தோற்றத்தால் மட்டும் பெறப்படுவதன்று. மனித வாழ்வோடு பொருந்திய அந்த ஆதி நாள்தொட்டு வளர்ந்து வருவது அது. நாகரிகம், பண்பாடு, கலை முதலியன மனித வாழ்வில் நீக்க முடியாத இடம் பெற்றுள்ளன. ஆதி மனிதன் பெற்றிருந்த நாகரிகமும், பண்பாடும், கலை நலமும் நாம் திட்டமாக அறிந்துகொள்ள முடியாதன. அப்படி அறிய முடியாத காரணத்தினலேதான் அவனை வரலாற்றுக் காலத்துக்கு முற்பட்ட மனிதன் என்று கூறிவிட்டார்கள். ஆனால், அவன் வரலாற்று எல்லைக்கு உட்பட்டு வந்தபிறகு, அவனைப் பல்வேறு கோணங்களில் ஆராயத் தொடங்கி விட்டார்கள். மொழிக் குடும்பத்தை பல்வேறு வகையில் பிரித்த வகையிலேயே நாகரிகத்தையும் பல் வேறு வகைகளாகப் பிரித்தார்கள். எகிப்திய நாகரிகம், திராவிட நாகரிகம், சிந்து வெளி நாகரிகம், மத்திய ஆசியா நாகரிகம் என்று எத்தனையோ வகையாக நாகரிகங்களையும் பகுத்துப் பகுத்து ஆராய்ந்தார்கள். அந்தந்த நாகரிகங்களில் மனிதன் தனித்தனியாகச் சிறந்துதான் வாழ்ந்துள்ளான். நாகரிகம் என்பது மனிதனது பண்பாட்டை அடிப்படையாகக் கொள்வது. இன்று நாம், நாகரித்துக்குப் பல வகையில் பொருள் காண்கின்றோம். ஒரு சிலர் நகரங்களில் வாழ்வதை நாகரிகம் என்கிறனர். ஆனால், பண்டைத் தமிழ் நாட்டில் 'நஞ்சுண்டமைவர் நனி நாகரிகர்', என்றும்,

'பெயக்கண்டும் நஞ்சுண்டு அமைவர் நயத்தக்க

நாகரிகம் வேண்டு பவர்.'

(குறள். 580)

என்றும் நாகரிகத்தைப் பண்பாட்டில் வைத்துப் பாராட்டிப் பேசுகின்றனர். இவற்றின் விரிவையெல்லாம் பின்னால் நாம் காண இருக்கின்றோமாதலின் இந்த அளவோடு இவற்றைப் பற்றி நிறுத்திக் கொள்வோம். இவ்வாறு மனித வாழ்க்கை