பக்கம்:கவிதையும் வாழ்க்கையும்.pdf/218

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மனித வாழ்க்கை

219



சமயம் வழி வகுக்கும் என்றே, அவன் சமய வாழ்க்கையை வளர்த்துக் கொண்டிருக்க வேண்டும். அதன் வழியே, மற்றவருக்குத் தீங்கிழைத்தால், இறைவன்'தண்டிப்பான் என்ற உணர்விலேயே, நரகம் முதலியவற்றையும் கற்பனை செய்து கொண்டான். எனினும், அவன் சமய வாழ்வின் அடிப்படையினின்று நெடுந்துாரம் சென்றுவிட்டான் என்பது உண்மை. ஆயினும், இன்றும் அம் மனித வாழ்வில் பிற அனைத்தும் பின்னிக் கிடப்பன போன்று, இச் சமயவாழ்வும், அவன் வேண்டினும் வேண்டாவிடினும், விடாமல் பின்னித்தான் கிடக்கின்றது. எனவே, மனித வாழ்க்கையை ஆராயின் அவனது சமயத்தை விட்டுவிட்டு ஆராய்தல் என்பது இயலாது. இவ்வாறு தோன்றிய நாளிலேயிருந்து மனிதன் பல்வேறு வகையில், உள்ளத்தாலும் பிறவற்றாலும் மாறியும், திருந்தியும், வளர்ந்தும் இன்றைய நிலைக்கு வந்துள்ளான் என்பது தேற்றம்.

இவ்வாறு அணுவினும் சிறியதாகிய பொருளிலிருந்து, தோன்றிய நாள் தெரியாத அந்த நெடுங்காலந்தொட்டு, சிறிது சிறிதாக இன்றைய நிலையில் மனிதன் வளர்ச்சியடைந்துள்ளான். இன்றைய மேலைநாட்டு விஞ்ஞானிகள் இம் மனிதனை இடையில் வைத்துச் சென்ற காலத்தின் அருமையையும், இனி வருங்காலத்தின் திறத்தையும் ஆராய்கின்றார்கள். பரந்த அண்டகோளத்தின் எல்லையையும், அவற்றில் தோன்றும் விண்மீன்களின் அளவையும், அனைத்தினும் சிறிதாகிய அணுவுக்கணுவாகிய பொருளின் நிலையையும் கலந்து கணக்கிடுகின்றார்கள் இன்றைய விஞ்ஞானிகள். மனிதனது வாழ்க்கையும், வாழ்வுக்காலமும் எப்படி அமையினும், அவன் தோற்றத்தின் அளவு அண்டகோளத்தின் இடைப்பட்ட அளவு என்பது அவர்தம் முடிவு. இதையே முடிந்த முடிபு என்று கொள்ளாவிட்டாலும், இன்றைய விஞ்ஞான வளர்ச்சி அந்த அளவிலேதான் அவன் அறிவிடை நிற்கின்றது என்று கொள்ளலாம். காலப்போக்கில் மேலும் ஆய்வு நடக்க நடக்க இந்த அளவு மாறினும் மாறலாம். அவர்கள் இன்று கண்ட அளவுதான் என்ன?