பக்கம்:கவிதையும் வாழ்க்கையும்.pdf/223

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

224

கவிதையும் வாழ்க்கையும்


களுக்கு முன் எழுத்தும் சொல்லும் தோன்றியிருக்க வேண்டும். அவற்றையெல்லாம் தொகுத்துச் செம்மையான முறையில் அமைக்கப்பட்ட ஓர் இலக்கண நூல், ஒரு நாட்டில் இருக்குமாயின், அந்நாட்டுப் பழமையை அதுவே பறை சாற்றும். எனவே, சுமார் ஐயாயிரம் ஆண்டுகளுக்குமுன் தோன்றிய தொல்காப்பியத்தின் நிலையைக் கொண்டே தமிழின் தொன்மையையும் தமிழரின் வரலாற்றையும் வரையறுக் கலாமன்றோ?

மொழிக்கு இலக்கணம் வகுத்த பிற நாட்டாரெல்லாம் எழுத்துக்கும் சொல்லுக்கும் இலக்கணம் கண்டார்கள், மொழி அவற்றால் ஆக்கப்படுகின்றமையின். அதன்பின் அம் மொழிக்கு அழகு செய்யும் யாப்பும் அணியும் அவற்றோடு சேர்க்கப்பட்டன. ஆனால், அம் மொழியால் விளக்கமுறும் பொருளுக்கு இலக்கணம் கண்டார் எம்மொழியிலும் இலர். தொல்காப்பியரோ பொருளுக்கெனப் பேரிலக்கணம் வகுத்துவிட்டார். அதுவும் வெற்று இலக்கணம் என்ற வகையில் அமையாது, தமிழர்தம் வாழ்வை அப்படியே படம் பிடித்துக் காட்டுவது போன்று அமைந்துவிட்டது. தொல்காப்பியம் தமிழர் வாழ்வைத் தனித்தனிப் பலவகையில் அலசி ஆராய்ந்து விளக்கமாக நமக்கு எடுத்துத் தந்துவிட்டது. எனவே, தமிழர் தம் வாழ்க்கை முறையை அறிவதில் கடினமான நிலை ஒன்றுமில்லை. அவர்தம் நாட்டு வாழ்க்கையினையும் வீட்டு வாழ்க்கையினையும் தனித் தனியாகப் பிரித்து, அவற்றின் வேறுபாடுகளையும் கூறுபாடுகளையும் அலசி ஆராய்ந்து, ‘இஃது இன்ன தன்மைத்து’ என்று ஒவ்வொன்றையும் தொல்காப்பியர் எடுத்துக்காட்டும் நிலை, அறிந்து இன்புறத்தக்க ஒன்றாகும்.

தொல்காப்பியம் இலக்கண நூல். தொல்காப்பியரே தம் நூலில் பலவிடங்களில் கூறியது போன்று, அவருக்கு முன் பெரியார் பலர் இவ் வாழ்க்கையைப் பற்றியும், பிறவற்றைப் பற்றியும் எழுதிவைத்துச் சென்றிருப்பர். அவர்தம் ஆசிரியர் அகத்தியர் காட்டியவாறு, இலக்கணம் இலக்கியத்தினின்று