பக்கம்:கவிதையும் வாழ்க்கையும்.pdf/226

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அகமும் புறமும்

227



பற்றிய அவர்தம் பாடல்களையும் நோக்குவோமாயின், அவர் அழிவு என்ற சொல்லுக்கு நிலைகெடுதல் என்ற பொருளே கொள்ளுதல் விளங்கும். இன்றும் வாழ்வில் மிகவும் கெட்டுச் சீரழிந்த ஒருவனை 'அவன் அழிந்தான்' என்று கூறுவதைக் கேட்கவில்லையா? அந்த நிலையில் அழிதல் நிலைகெடுதலைக் குறிப்பதாகுமே அன்றி, அடியோடு கெட்டதாக முடியாதே!

உயிர் நிலைகெடாத ஒன்று என்பதை மேலே கண்டோம். சிலர் மெய்யோடு சேர்ந்த வழி உயிரும் தன் இயல்பு கெடுகின்றது என்பர். சமயவாதிகள் உயிரும் மெய்யும் கலக்கும் காலத்து ஆற்றும் வினைக்கேற்ப, உடல் அழிந்தபின் உயிர் அவ்வினையை அனுபவிப்பதையே அழிதல் என்பர். எந்த நிலையாயினும், உயிரின் தோற்றநிலை திரிவது இல்லை. இவற்றை யெல்லாம் மேலே கண்டோம். உயிர் எந்த உடம்பில் சேர்ந்து தோற்றமும் வளர்ச்சியும் பெறினும் தன்னிலை கெடாததாய், என்றும் உள்ள ஒன்று. இதை உயிர்மெய் எழுத்தின் அளவின் நிலை கூற வந்த விடத்திலே தொல்காப்பியனார் 'மெய்யொடு இயையினும் உயிர் இயல் திரியாது.' (9) என்று நன்கு எடுத்துக் காட்டுகின்றார். முன் சூத்திரத்தை நாம் நினைத்தபடி இதுவும் இலக்கணச் சூத்திரம் என்பதை மறந்து, உயிர் நூற் புலவர் கண்ட ஓர் உண்மைச் குத்திரம் என்று கொள்வோமாயின், இன்றைய உயிர் நூற் புலவர்தம் ஆராய்ச்சிகள் பல இதில் அடங்கியிருப்பதைக் காண்போம். இவ்வாறு பிறப்புப் பற்றியும், மெய்ப்பாடு, மரபு முதலிய இயல்புபற்றியும் பலப்பல உண்மைகளை-உயிர் பற்றிய வாழ்க்கை முறைகளை-தொல்காப்பியர் காட்டிக்கொண்டே செல்கின்றார். அவற்றை யெல்லாம் வாய்ப்பு நேருமேல் பின்னர்க் காண்போம்.

தமிழர் வாழ்க்கையைப் பொருளதிகாரத்தில் கூறவந்த தொல்காப்பியனார், அவ்வாழ்க்கையையே இரண்டாகப் பிரிக்கின்றார். இன்பம் என்பது எல்லா உயிர்க்கும் பொது என்று அவர் குறித்திருப்பதை மேலே கண்டோம். அந்த இன்பத்தை மக்கள் துய்க்கும் வழிவகைகளை யெல்லாம், அவர் நன்கு ஆராய்ந்து காட்டுகின்றார், நாட்டிலேயும் ஏட்டிலேயும் தம்