பக்கம்:கவிதையும் வாழ்க்கையும்.pdf/231

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

232

கவிதையும் வாழ்க்கையும்


தலைவன் தலைவி எனப்பட்டார்-தம்முள் தனியாகக் ‘கண்டு, கேட்டு, உண்டு, உயிர்த்து, உற்று அறியும் ஐம்புலனால்’ பெறுகின்ற இன்ப நிலையினை - எடுத்துக்காட்ட முடியாத அந்த அன்பு உள்ள நெகிழ்ச்சியையே -- தமிழர்கள் அகம் எனக் கண்டு வாழ்ந்தார்கள் என்பது தெளிவு.

மற்றோர்க்கு இவ்வாறு இருந்தது என்று எடுத்துக் காட்ட முடியாத ஒன்றுக்கு எப்படி இத்தனை இலக்கியங்கள் தோன்றின என்பது அதிசயமல்லவா! வாய்விட்டுச் சொல்ல முடியாத ஒன்றை எப்படிக் கவிஞன் வரி வடிவில் தீட்டினான்? அது அதிசயந்தான் என்றாலும், சொல்ல இயலாத அந்தப் புலன் உணர்வால் பெறும் இன்பத்தை எடுத்துக்காட்ட எவரும் முன் வரவில்லை. அந்த இன்பத்தினை எடுத்துக் காட்டவும் இயலாது. அப்படிக் காட்ட முடியுமாயின், அதை அவ்வாறு 'அகம்' என்றுதான் கூற முடியும்? ஆகவே, அந்த இன்பம் தோன்றும் நெறியையும், அதற்குத் துணையாயவரையும், மேலும் அதற்கு அமைந்த சுற்றுச் சார்புகளையும், அதற்கு முன்னும் பின்னும் பெறும் உள்ள நெகிழ்ச்சி நிலையினையும், அதன் வழித்தோன்றும் உடலின் மெய்ப்பாடுகளையும்; இன்ன பிறவற்றையும் விளக்கு வனவே இவ்வகம் பற்றிய பாடல்கள் அத்துணையும். அவற்றின் விரிவையெல்லாம் ஆங்காங்கே கண்டுகொண்டே செல்லலாம்.

அகவாழ்வுக்கு அடிப்படையாக 'ஐந்திணை'யைப் பகுத்துக் கொண்டார்கள். அப்படியென்றால், இலக்கண ஆசிரியர் ஏற்படுத்திக் கொண்ட வரையறை என்பது பொருளன்று. இயல்பான வாழ்வே அவ்வாறு அமைந்தது. அதை அவர்கள் இலக்கணப்படுத்திக் காட்டினார்கள். மனித இனம் தோன்றி வளர்ச்சி அடைந்த காலத்தில், இயல்பாகவே அவ்வினம் பெருகப் பெருக, அறிவு வளர வளர, உள்ளம் சிறக்கச் சிறக்க, மலை, காடு, நாடு, கடல் என்ற நால்வகை நிலத்திலும் மனிதர் தம் வாழ்வினை அமைத்து வாழ்ந்த வரலாற்றைக் கண்டோம். அந்த அடிப்படையிலேதான் அவர் தம்காதல் வாழ்வு அமைந்தது. ஆம். காதல் என்பது எங்கோ தான் வாழும் இடத்தை விட்டுச் சென்று நாடகக் காட்சி போலப் பற்றிப் பிடித்து, பின்னர்