பக்கம்:கவிதையும் வாழ்க்கையும்.pdf/233

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

234

கவிதையும் வாழ்க்கையும்


 பண்பாடு உயிரினும் மேம்பட்டது என்பது தமிழர் கண்ட முடிபு. இதைக் குறித்துத்தான் வள்ளுவர், "ஒழுக்கம் உயிரினும் ஓம்பப் படும்,' என்று பாராட்டுகின்றார். அந்த ஒழுக்கத்தையே திணை என்று குறித்தார் முன்னையோர். இப்படித் திருந்திய ஒழுக்கம் மனித சமுதாயத்தில் உருப்பெற்றிருக்க வேண்டுமாயின், அதற்குமுன் எத்தனையோ ஆயிரம் ஆண்டுகள் அம்மனித சமுதாயத்தின் வாழ்வெல்லையில் கழிந்திருக்க வேண்டும். எனவே, தொல்காப்பியர் இவ்வொழுக்கமாகிய திணை நிலையைக் கூறும்போது, தமிழராகிய மக்கள் இனம் உயர்ந்த பண்பாட்டில் வாழ்ந்திருக்க வேண்டுமன்றே!

ஒழுக்கம் என்பது என்ன? மக்கள் தங்கள் வாழ்வில் அதை எவ்வாறு மேற்கொண்டார்கள்? ஒவ்வொரு நிலத்திலும் வாழும் மக்கள் தங்கள் வாழ்வினை ஒவ்வொரு வகையாக அமைத்துக் கொண்டார்கள். அவ்வாழ்வில் அவரிடை அமைந்த காதல், ஒழுக்கத்தையே, இங்கே திணை அல்லது ஒழுக்கம் எனக் குறிக்கின்றார் ஆசிரியர். மலையைக் குறிஞ்சி என்றும், காட்டை முல்லை என்றும், கடலை நெய்தல் என்றும், வயலை மருதம் என்றும் திணைப்பெயர் கொடுத்துப் பிரித்துள்ளார்கள். அவ்வத் திணைக்கு ஏற்பப் புணர்தலையும் இருத்தலையும் இரங்கலையும் ஊடலையும் ஒழுக்கப் பொருளாக அமைத்தார்கள். இவ்வாறு தனித்தனியாக அமைத்தமையின், ஒன்றின் செயலோ, நிலையோ மற்றவற்றிற்கு அடியோடு இல்லை என்பது பொருளாகாது. அப்படியிருப்பின், எல்லா நிலத் திலும் இன்பம் இயையாதன்றோ! இன்பமாகிய அந்த அக ஒழுக்கத்திற்கு வரையறை செய்யப்பட்ட ஒவ்வொன்றும் ஒவ்வொரு நிலத்திலும் சிறந்திருக்கும் என்பதே பொருள். இவற்றின் விரிவையெல்லாம் தொல்காப்பியத்திலும் அதன் உரையிலும் காண்பது நலம் தருவதாகும்.

இனி, பாலையைத் தனி நிலமாக்காததற்கும் காரணம் உரையாசிரியர் காட்டுவர். பாலை தனி நிலமன்று; சிலப்பதிகாரத்தின் வழி, அது இரு நிலங்கள் சேரும் இடத்தில் அமைவது என்பது புலனாகின்றது. -