பக்கம்:கவிதையும் வாழ்க்கையும்.pdf/236

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அகமும் புறமும்

237



அதற்கு எல்லை அமைப்பான் 'தொல்லியல் வழாமல் சொல்லவும் படும்' என அறுதியிடுகின்றார். எத்தனையோ புனைந்துரை நூல்கள் கேட்பாரற்று மங்கி மறைந்தன. எனவே, புனைந்துரை மிகுமாயின் அது வாழ்விலக்கியமாக முடியாது. வாழ்விலக்கியமல்லாதன எல்லாம் என்றாவது ஒருநாள்-ஏன்-விரைவிலேயே வழக்கா றற்று விழவேண்டுபவைதாமே? இதைக் கருத்தில் எண்ணித்தான் போலும், புனைந்துரைக்கு எல்லை வகுத்து விட்டனர்! ஆடை அணிகலன் உடலுக்கு அழகு செய்வது போன்று, புனைந்துரை ஒரளவுக்குத் தேவைதான். ஆனால், அந்த ஆடை அணிகலன்களே இயற்கை அழகை மாசு படுத்தும் அளவுக்கு மிகுமாயின், அதனால் தீமை விளையுமன்றோ! புனைந்துரை தேவையேனும், அதை அளவறிந்து உபயோகிக்க வேண்டும்.

இனி, இவ்வகையான அகப் பாடலுக்குத் தேவையான முதல் கரு உரி என்ற மூன்று பொருள்களைப் பற்றி ஓரளவு காணல் வேண்டும். முதற் பொருளாவன நிலமும் பொழுதும் ஆகும். உண்மைதானே? நிகழும் இடமும் அதற்குரிய காலமும் இல்லையானால், பின் நிகழ்ச்சி நடைபெறுவதுதான் எங்கே? இந்த நிலத்தையும் காலத்தையும் பாகுபடுத்தி, மேற்கண்ட ஐவதையாக நிலத்தைப் பிரித்துப் பொழுதைப் பெரும் பொழுது ஆறு, சிறு பொழுது ஆறு எனப் பன்னிரண்டாக்குவர். பின்பு ஒவ்வொரு நிலத்துக்கும் உரிய பொழுதுகள் இவை இவை என வரையறுத்து விடுகின்றனர். எல்லாப் பொழுதும் எல்லா நிலத்துமே நிகழ்கின்றனவேனும், அவற்றுள் ஒவ்வொரு பொழுது ஒவ்வொரு நிலத்தில்தானே சிறப்படையும்? இந்த உண்மை அன்று மட்டுமின்றி, இன்றும் உண்மையாகத்தானே உள்ளது? நிலத்துக்கு நிலம் பொழுதும் காலமும் மாறுபட்டுச் சிறப்பதை அறியாதார் யார்? எனவே, அவற்றின் அடிப்படையிலேதான் அந்தக் களவும் கற்பும் கலந்த அக ஒழுக்கம் நடைபெற்ற தென்பதில் ஐயமுண்டோ!

இனி, உரிப்பொருள் என்பன அவ்வந் நிலத்துக்கே உரிமையாகிச் சிறக்கின்ற பொருள்கள் என்பார்கள். புணர்தலும்,