பக்கம்:கவிதையும் வாழ்க்கையும்.pdf/24

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

24

கவிதையும் வாழ்க்கையும்


அரசரும் பிறருங்கூட அவர்தம் பாடலில் இடம்பெறுகின்றனர். எனினும், சுந்தரர் அவர்களையெல்லாம் கலைநலம் பெற்ற வராகக் காணவில்லை; கலை மலிந்தவராகப் பாராட்டவில்லை. ஆனால், வேடராகிய கண்ணப்பரை, கலைமலிந்த சீர்நம்பி கண்ணப்பர்க் கடியேன்." என்று பாடுகின்றார். அதன் கருத்து என்ன? ஒருமை உணர்வைத் தூண்டி, அவ்வுணர்வின் வழியிலே ஊற்றுப் பெருக்கெடுத்து ஓடி வருவதுதான் கலை என்பது தெளிவாகின்றது. இவ்வாறு ஒருமை வாழ்வில் ஒன்றிய உணர்வினராய், கொண்ட கருத்தை நாட்டுக்கு நன்கு விளங்குமாறு பாட்டிசைக்கும் வல்லவரே கவிஞராவர். அவர்தம் பாடல்களே கவிதை எனப்படும் கலை நிறைந்த பெட்டகங்கள் ஆகும்.

எனவே, உலகில் பல கலைகள். வாழ்ந்தாலும் கலைஞனையும், கற்பாரையும், கேட்பாரையும் ஒருசேர மகிழ்விக்கும் கலை, கவிதை ஒன்றே என்பதும், அக் கவிதை , வெற்று எழுத்தாலும் சொல்லாலுமட்டும் ஆக்கப்படுவதன்று என்பதும், பொருள் நலமே, அதன் உயிர்நாடி என்பதும், அக்கவிதைக் கலையில் அனைவருமே வல்லவராக முடியாது என்பதும், எங்கோ ஒரு சிலர்தான் அக்கலையில் சிறந்தவராக முடியும். என்பதும், அதற்கு அவர்தம், உள்ளத்தூய்மையும் ஒருமை உணர்வுமே இன்றியமையாதனவாய் அமைகின்றன என்பதும், அந்த நல்லுள்ளத்து ஊற்றுப் பெருக்கெடுத்து ஓடிவரும் கவிதையே கலையாய் உலகை வாழவைக்கும் என்பது அறிந்தோம்.