பக்கம்:கவிதையும் வாழ்க்கையும்.pdf/243

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

244

கவிதையும் வாழ்க்கையும்


 வேண்டும் என்பதைக் கூறுகின்றார். தான் கொண்ட் செயலில் திளைத்துக் கடமை உணர்ச்சியில் தலைநின்று, செயலாற்றுங் காலத்துத் தலைவன் அவளைப் பற்றியும், அவள் நிலை பற்றியும் நினைத்து இரங்கலாகாது என்றும், செயலின் இறுதியில்-தான் எடுத்த செயல் வெற்றியுற்று முடியும் தறுவாயில்-வேண்டு மாயின் நினைக்கலாம் என்றும் கூறுகின்றார்.

'கிழவி நிலையே வினையிடத்து உரையார்
வென்றிக் காலத்து விளங்கித் தோன்றும்;

(மெய்ப் 45)

என்ற சூத்திரம் இதைக் காட்டுகின்றது. எனவே, தமிழர் காதல் வாழ்விலேயே திளைத்து அதன்வழி கடமையாற்றாது க்ருத்தழிந்து நின்றவரோ என்பார்க்கு, அவ்வாறு எண்ணுவதுதகாது என்பதும், அவர்கள் காதல் வாழ்வைக் கண்ணினும் இனிமையாகக் காத்த காலத்தும், கடமை மறந்து சுயநலத்தின் உழலாதவர் என்பதும் இவற்றால் நன்கு விளங்கும். இவற்றின் விரிவெல்லாம் பின்னர்க் காண்போம். இனி, இக்கடமை வழி அம்மக்கள் ஆற்றிய புறவாழ்வைப் பற்றியும் அறிந்து கொள்ளல் வேண்டுமன்றோ!

மனித வாழ்வில் இன்பம் பற்றி வாராதனவெல்லாம் புறம் என்பதை மேலே கண்டோம். அவை அறமும் பொருளும் ஆம். அவற்றுடன் சிந்தையும் மொழியும் செல்லா நிலைமைத்தாகிய வீட்டினையும் சேர்ப்பர். எனவே, அறம், பொருள், வீடு என்ற மூன்றையும் குறிக்க வருவன வெல்லாம் புறத்திலே சார்த்திப் பேசப்பெறும். இப்புறத்தில் கடவுள் நெறி முதலாக, அறமாற்றல், பொருள் பெருக்கல், அவற்றில் வரும் சிக்கல்கள், அவற்றைத் தீர்க்கும் முறைகள், வாயில்கள் இன்ன பிறவெல்லாம் விளக்கமாகப் பேசப் பெறுவன. அகப்பொருளைப் பார்க்கும்போது, நடுவண் ஐந்திணை என்பனவற்றைக் கண்டோம். அவையே அகத்திற்குச் சிறப்பானமையின், அவற்றை மட்டும் கண்டு மேலே வந்துவிட்டோம். எனினும், அவற்றோடு தொடர்புடைய கைக்கிளை, பெருந்திணை என்னும் இரண்டும் உள்ளன. ஆயினும், இவை ஒரு புறக் காமமும்,