பக்கம்:கவிதையும் வாழ்க்கையும்.pdf/247

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

248

கவிதையும் வாழ்க்கையும்



புறத்திணை இயல் முதல் சூத்திரத்திலேயே 'அரில் தப உணர்ந்தோர்’ என்று காட்டுகின்றார்! இவ்வாறு காணாது புறத்துக்கும் அத்துணை முதல் கரு உரிப் பொருள்களையும் கூறிக்கொண்டே செல்லின், அது கூறியது கூறலென்னும் குற்றத்தின்பாற் படாதோ? மேற்காட்டிய ஏழு விளக்கங் களையும் நன்கு நோக்கின், அவற்றின் பொருத்தம் விளங்கித் தோன்றும் என்பது உறுதி.

இனி, இப்புறப் பொருளில் இன்னின்ன பொருள்கள் விளக்கப் பெறுகின்றன என ஒரளவு காணின், தமிழர் வாழ்க்கை நெறியை ஒருவாறு கண்டவராவோம். காதல் வாழ்வில் மட்டுமன்றிக் கடமை வாழ்விலும் அவர்கள் திளைத்திருந்தார்கள் என்பதைப் புறம் பற்றிய இலக்கியங்களும் இலக்கணங்களும் எடுத்துக் காட்டுகின்றன. "இப்புறத்தில் போர் செய்தல்தானே பெரும்பாலும் பேசப்படுகின்றது? அது பெருவேந்தருக்கு உரிய தொழிலன்றோ அதைச் சிறப்பித்துப் பேசுதல் எப்படி மக்கள் வாழ்க்கையைப் பேசுவதாக முடியும்?' என்ற வினா எழும். எனினும், நூலாக்கும் நல்லோர், மேல்வரிச் சட்டமாக வாழ்வில் உயர்ந்தோரை வைத்துக் கொண்டேதான் பொதுவாழ்வை வரையறுப்பார்கள் என்பது எந்த நாட்டிலும் கைக்கொள்ளும் வழக்கந்தானே? வெற்று அரச வாழ்வை மட்டும் குறிப்பதாயின், நாமே முன் காட்டிய வரலாற்று ஆசிரியர் இழைத்த தவற்று வழி, இதுவும் தவறாகும். ஆனால், இங்குப் புறத்தில் அவ்வாறு அரசர் வாழ்வு மட்டும் பேசப்பட வில்லை. அவர்தம் கடமையை அறிவுறுத்துவதன் மூலம், அவர் நாட்டுக்கு ஆற்றவேண்டிய கடமையையும் அவர் வழி மக்கள் மேற்கொள்ளவேண்டிய வாழ்வையும், பிறவற்றையும் விளக்குகின்றனர் புலவர். அதுமட்டுமன்றி, வாகையும், காஞ்சியும், பாடாண் திணையும் வெற்று அரச வாழ்வை மட்டுமின்றிப் பெரும்பாலும் பொதுமக்கள் வாழ்க்கையைப் பற்றியும் பாராட்டுகின்றனவே! எனவே, புற வாழ்வு, அனைத்தையும் உள்ளடக்கிய ஒன்றே என்பதும், அதன்வழித் தமிழர் வாழ்க்கை பல்வகையில் சிறந்திருந்தது என்பதும் தேற்றம்.