பக்கம்:கவிதையும் வாழ்க்கையும்.pdf/251

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

252

கவிதையும் வாழ்க்கையும்


 எண்ணி, அவற்றில் இறந்தவரைப் பற்றியெல்லாம் அவர்தம் சுற்றமும் பிறரும் வருந்தும் நிலையை எண்ணி, அந்த நிலையில் மேலும் போராற்ற வேண்டும் என்ற பேராவலைத் தணிக்கத் தான், இத்தகைய நிலையாமையை வற்புறுத்துகின்றாரோ என்று ஐயுறுமாறு காஞ்சியின் பிரிவு பேசப்படுகிறது.

தொல்காப்பியனாரே போராடும் வெறியை ஒப்புகிறார் என்று, ஒருவன் கடமை மறந்து, உலக நெறி மறந்து, தன் வலியின் நிலை ஒன்றையே கருதி, என்றும் போரே செய்து வாழத் திட்டமிட்டுச் சென்றுகொண்டே யிருப்பாயிைன், அவனே அறவேலியிட்டுத் தடுக்க வேண்டுவதுதானே அறிஞன் கடன்! அந்த நிலையிலேதான் தொல்காப்பியர் காஞ்சியை இடையில் வைத்து, போர்க் கடைமையின் எல்லையை வகுத்து, அது அளவு மீறினால் வரும் தொல்லையை விளக்கி, போர்க்களத்தில் மகனை இழந்த தாயையும், கணவனை இழந்த மனைவியையும், பிற நிலைமையையும் எதிரே காட்டி, இந்த நிலையில் உலகம் செல்வது தக்கதன்று, எதற்கும் எல்லையுண்டு.' என்று விளக்கி, அமைதியை நிலைநாட்டவே ஆய்ந்துணர்ந்து இக் காஞ்சித் திணையைப் புகுத்தியுள்ளனர். நாடெலாம் வெற்றி கொண்டு, நாட்டிலே பத்தினி தேவிக்கு விழா எடுக்க வந்த, செங்குட்டுவன் மீண்டும் தமிழ் மன்னர்மேல் சீற்றங்கொண்டு படையெடுக்க நினைக்குங்கால். அங்கிருந்த அறிஞனகிய மாடல மறையோன், இளமையும் யாக்கையும் செல்வமும் நிலையாதன என அவன் முன்னே எடுத்துக்காட்டி,

'ஐயைந் திரட்டி சென்றதன் பின்னும்
அறக்கள வேள்வி செய்யாது யாங்ஙணும்,
மறக்கள வேள்வி செய்வோய் ஆயின'

(சிலப். 23:130-32)

என்று அவன் சினத்தை அவித்து, அவனைச் சீர்திருத்திய ஒரு காட்சி, இத்தொல்காப்பியத்துக்கு இலக்கியமாக அமைகின்றதன்றோ? வஞ்சிக் காண்டமே வடநாட்டுப் படை எடுப்பாகிய போர்விளக்கும்.புறப்பாட்டாய் இருக்க, அதன் இறுதியில் இக் காஞ்சித் திணையைக் காட்டியிருப்பது எவ்வளவு சிறந்துள்ளது!

இவ்வாறு காஞ்சித் திணையைக் காட்டிய காரணத்தாலே, அரசனே அல்லது செல்வனே. அனைத்து வாழ்வையும் துறந்து ஆண்டியாகிவிட வேண்டுமென்று யாரும் கூறவில்லை.