பக்கம்:கவிதையும் வாழ்க்கையும்.pdf/252

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அகமும் புறமும்

253



வரலாறும் அப்படிச் சென்றவரைக் காட்டாது என் நினைக்கின்றேன். பின் இந் நிலையாமைப் பேச்சுத்தான் எதற்கோ எனில், அளவுக்குமீறிய போரின் நிறுத்தத்தை மட்டுமன்றி, பிற உண்மைகளையும் இதனால் கூற விழைகின்றார். பொருளைப் போர் மூலமும், வீட்டைக் கடவுள் வாழ்த்து, நிலையாமை வழியும் காட்டும் புறவாழ்வு, அறத்தைப்பற்றிக் கூறவில்லை என எண்ணுவோர்க்குப் பதிலையே இந்தக் காஞ்சித் திணை தருகின்றது. காஞ்சியின் கருத்து, பாடாண் திணையின் புற வாழ்வு பற்றிய இலக்கணத்தே இடம் பெற்றுள்ளது. இவ்வாறு நிலையாமையை உணர்ந்த ஒருவன், உலகை நேர்க்கி, வாழும் நெறியும் வாழும் முறையும் கண்டு, தன்னைப்போலப் பிறரை ஒத்து நோக்கி, எல்லாரும் இன்புற்றிருக்க நினைக்கும் மெய் வழியை ஆராய்ந்து, அதன் வழி அறமாற்றுதலே காஞ்சித் திணை வழியில் எழுந்த பாடாண் திணை யாகும். அரசனைப் பாடிச் செல்லும் கூத்தரும் பாணரும் பொருநரும் விறலியும் தாம் தாம் அவ் வரசனிடம் பெற்ற பெருஞ் செல்வத்தைப் பாராட்டுவது பாடாண் திணையாம். இவற்றின் மூலம் அரசன் ஆற்றும் அறநிலையும், அரசனல் விளையும் பயனும் அறிந்து கொள்ளுகின்றோம். இன்னும் அரசன் பிறந்தநாள் மங்கலம், மண்ணு மங்கலம், வாள் மங்கலம் முதலாகிய சிறந்த நாள்களில், அவன் மற்றவர்களுக்கு வாரி வழங்கும் கொடைநல மெல்லாம் பேசப்படுகின்றன. இவ்வாறு காஞ்சியாகிய நிலையாமையை உணர்ந்த தலைமக்கள், தாம் எத்துணை சேர்த்து வைப்பினும் பலன் இல்லை என்பதை உணர்ந்து, பெற்றவற்றை மற்றவருக்கும் பகிர்ந்து கொடுத்து, எல்லோரும் இன்புற்றிருக்கச் செய்ய வழிகாட்டலே பாடாண் திணையாகும். இவ்வாறு அறம், பொருள், வீடு என்ற மூன்று பொருள்களையும் மக்கள் வாழ்க்கையோடு பிணைத்துச் செல்லுகின்றது புறம்.

எனவே, தமிழ் மக்கள் சிறக்க வாழ்ந்தார்கள் என்பதும், அவர்தம் அகவாழ்வு போலவே புறவாழ்வும் விளக்கமுற்றுச் சிறந்து நின்றதென்பதும் அறிகின்றோம். தமக்கென வாழாப் பிறர்க்குரியாளராக வாழவேண்டுமென எந்நாட்டவரும் எம் மதத்தவரும் அன்று தொட்டு இன்றுவரை வரையறுத்துக்