பக்கம்:கவிதையும் வாழ்க்கையும்.pdf/254

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



 

1. வாழ்வொடு பிணைந்த கவிதை


விதையைப் பற்றியும் வாழ்க்கையைப் பற்றியும் தனித் தனியாக ஆராய்ந்தோம். இனி, அவற்றின் இணைப்பைப் பற்றியும், அவை ஒன்ருேடொன்று எவ்வாறு பின்னிப் பிணைந்துள்ளன என்பது பற்றியும், கவிதையின்றேல் வாழ்க்கையில்லை, வாழ்க்கையின்றேல் கவிதை இல்லை, என்பது பற்றியும் காணுதல் வேண்டும். கவிதை வாழ்வின் ஊற்றிலே மிதப்பது என்பதை மேலே கண்டோம். உலகில் எத்தனையோ கவிதைகள் உண்டாகின்றன. மனிதன் பாடத்தொடங்கிய அந்த நாள் முதல் இன்றுவரை எழுதப்பட்ட கவிதைகளின் எண்ணிக்கையை வரையறுக்க இயலாது. ஆனால், அவற்றுள் வாழ்வன மிகச் சிலவே. இந்த நாளிலுங்கூட, எத்தனையோபேர் கவிதை பாடுகின்றார்கள். அவற்றுள் மிகப்பல தோன்றிய அன்றே மாய்கின்றன. சில அவ்வாறு சாகாக் கவியாக நிலைபெற்று வாழ்வதற்கும், பல அன்றே மாய்ந்து அற்ப ஆயுளில் முடிவதற்கும் அமைந்த காரணங்கள்தாம் யாவை? அவற்றைக் காணில், உண்மைக் கவிதைப் பண்பும், அது வாழ்வோடு பிணைந்த தொடர்பும் நன்கு விளங்கும்.

'உளங்குளிர்ந்த போதெலாம் உவந்துவந்து பாடுவன்;

என்றார் ஓர் அடியார்.


‘உள்ளத்தில் உண்மைஒளி உண்டாயின்
வாக்கினிலே ஒளிஉண் டாகும்
வெள்ளத்தின் பெருக்கைப்போல் கலைப்பெருக்கும்
கவிப்பெருக்கும் மேவும்.’