பக்கம்:கவிதையும் வாழ்க்கையும்.pdf/255

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

258

கவிதையும் வாழ்க்கையும்



என்கின்றார் பாரதியார். இவற்றின் மூலம், உள்ளம் குளிர்ந்து ஒளி சிறக்கும் நல்ல அமைதி கலந்த வாழ்க்கையிலேதான் உயர்ந்த கவி பிறக்கும் என்ற உண்மை புலனாகின்றதன்ருே? இதனால், கவி செல்வத்தில் புரளவேண்டும் என்பதன்று கருத்து. எதனால் இரண்டு ஆசிரியர்களும் உள்ளத்தைக் குறிக்கின்றார்கள்? 'உள்ளுவ தெல்லாம் உயர் வுள்ளும்' நல்ல உள்ளம் வறுமையைக் கண்டு வாடாது; செல்வத்தைக் கொண்டு செம்மாந்து சீரழியாது. அந்த உள்ளத்தின் பண்பு அமைதி காண்பதே. அந்த அமைதிதான் வாழ்வில் வேண்டுவது. 'ஆசைக்கோர் அளவில்லை," என்ற தாயுமானவர் பாட்டின்படி, எதைக் கட்டி யாளினும், 'மேலும் எங்கே செல்வது?' என்ற ஆசையோடு, மேலும் மேலும் தாவிச்செல்லும் மனப்பாங்கு மனித உணர்வுக்கு மாறுபட்ட ஒன்றாகும். அந்த மனப் போக்கில், கவிதையும் கற்பனையும் விளையுமா? கருமமே கண்ணாக, தன் வாழ்வையும் பொருட்படுத்தாது, பொருளோ, அதிகாரமோ, அன்றிப் பதவியோ என்று வெறி பிடித்தாடும் உள்ளம் எப்படி ஒளிபெற்ற உள்ளமாகும்? அதே வேளையில் வறுமையுறினும் வழுக்கி விழாது, வாழ்வில் மனநிறைவு பெற்று, மாசற்று வாழும் நல்ல மனித உள்ளத்திலேதான் எத்தனைக் குளிர்ச்சியும் நல்லொளியும் நிறைந்து நிற்கும் அந்த உள்ளங் களில் பாட்டுப் பெருக்கெடுத்து ஓடி வாராது நிற்குமா? அவர்தம் உள்ளங்கள் பாடிய பாடல்களே வாழும் பாடல்களாகும். அவை மட்டும் ஏன் வாழவேண்டும்?

பாடல்கள் அல்லது கவிதைகள் வாழ்வோடு பிணைந்தனவாய் இருப்பின், அவை என்றென்றும் வாழும் என்பது உறுதி. சங்க காலத்திலே எத்தனையோ நூற்றுக்கணக்கான பாடல்கள் தோன்றின. அவற்றுள் பெரும்பாலன இன்றளவும், இரண்டாயிரம் ஆண்டுகள் கழித்தும், வாழ்கின்றன. அவை அவ்வாறு வாழக் காரணம் என்ன? அவை தம்மொடு தமிழர் வாழ்வை, தமிழ் நாட்டு வாழ்வை, தமிழின் வாழ்வைப் பின்னிக்கொண்டு போதலேயாகும். அவ்வாறு வாழ்வின் அடிப்படையில் அமைந்த கவிதைகள் சாகா வரம் பெற்றலை