பக்கம்:கவிதையும் வாழ்க்கையும்.pdf/27

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவிதையும் கவிஞனும்

27


அனுபவிப்பவன் முற்றிய கவிஞனாக முடியாது. தாம் இன்புறுவது உலகு இன்புறக் கண்டு காமுறுவர் கற்றறிந்தார்,' என்ற வள்ளுவர் வாய்மொழிப்படி, ‘யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்’ என்று வாரி வழங்குபவனே இறைநலம் பெற்ற கவிஞனாவன். கண்ட கவின் சிறப்பைத் தாம் மட்டும் அனுபவிப்பவரும் சிலர் உள்ளனர். அவர்கள் பருத்திக் குண்டிகை என்று பவணந்தியார் கூறும் வகையில் பயனற்று. ஒழிவார்கள். எனவேதான் தன் உயரிய உணர்வுகளை உலகுக்கு உணர்த்தும் நல்லாசிரியனே கவிஞனாகின்றான். அவன் கவியே கவிதை என்னும் சிறப்பையும் பெறுகின்றது.

நாள்தோறும் சூரியன் கீழ்த்திசையில் தோன்றுவதை நாம் காணுகின்றோம்; அதே சூரியன் மாலையில் மறைவதையும் காண்கின்றோம். ஆனல், அவற்றைப்பற்றிச் சிந்திப்பார் எத்தனை பேர்? ஏதோ பொழுது விடிந்தால் வேலைக்குப் போக வேண்டும் என்று எண்ணிப் புறப்படுபவரே பெரும்பாலோர்: அதேபோன்று, மாலையில் வீட்டுக்கு வருபவர் பலர். விடிந்தால் வயல்வெளிக்குச் சென்று மேய்ந்து மாலையில் கொட்டிலை நோக்கித் திரும்பும் மாடுகள் போன்று உழைப்பவரே, இன்று. மட்டுமன்றி என்றுமே உலகில் பலராய் வாழ்கின்றனர். ஆனால், அந்த உதயசூரியனின் தோற்றத்திலும் மாலைக்கதிரவனின் கிரணங்களிலும் எத்தனை எத்தனை வகையான இன்ப உரைகளைக் காண்கின்றார்கள், தம்மை மறந்து இன்பக்கவி பாடும் மெய்க் கவிஞர்கள்! அன்ருட நிகழ்ச்சியாய் அனைவருக்கும் காட்சிப் பொருளாய்க் கழியும் அதே சூரியன், கவிஞர்களுக்கு எத்தனை உண்மைகளை எடுத்துக் காட்டுகிறான்! வடமொழிக் காவியத்தைத் தமிழில் பாடவந்த கம்பர், வெறுங் கதையை மட்டும் பாடிச் செல்லவில்லை. அவரது கவியுள்ளம் கண்டகண்ட விடந்தோறும் கற்பனையில் திளைப்பது. எளிய பொருள்கள் அவருக்குப் பல உண்மைகளை உணர்த்தின. புரண்டோடும் கோதாவிரி யாற்று வெள்ளம், உண்மையில் கவி எப்படிப்பட்டது என்பதை அவர் உள்ளத்துக்கு உணர்த்திற்று. அவ்வுண்மையைக் கண்டு, அவர் காணும் கதிரவனது அறவுரையையும் பின்பு காணலாம்.