பக்கம்:கவிதையும் வாழ்க்கையும்.pdf/271

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

274

கவிதையும் வாழ்க்கையும்


காப்பியங்களை ஐம்பெருங்காப்பியம் என்று வழங்கியுள்ளனர். ஒவ்வொரு பிரிவையும் தனித்தனியாகக் காணலாம். முதலில் பத்துப்பாட்டினைப் பற்றிக் காண்போம்.

பத்துப்பாட்டு என்பது பத்துப் பெரும்பாடல்கள் கொண்ட ஒரு தொகுதியாகும். நாம் மேலே கண்டபடி அவை பெரும்பாலும் அகவற் பாக்களால் ஆகியவையே. அவற்றுள் அகவாழ்வும் பேசப்படுகின்றது; புற வாழ்வும் பேசப்படுகின்றது. அகமும் புறமும் ஒன்றோடு ஒன்று தொடர்புடையன என்பதை விளக்குகின்றார்கள். பல நிகழ்ச்சிகளையும், ஆசிரியர்கள் படம் பிடித்துக் காட்டுவது போன்று விளக்குகின்றார்கள். இந்தப் பத்துப்பாடல்களைப் பாடிய புலவர்கள் கவிதைநலம் தோய்ந்து, வாழ்வின் நெறியறிந்து வாழ்ந்தவர்கள் என்பது அவர்தம் பாடல்களால் நன்கு புலனாகின்றது. நக்கீரர், முடத்தாமக் கண்ணியார், பெருங்கெளசிகனர், உருத்திரங் கண்ணனர், கபிலர், நப்பூதனர். மாங்குடி மருதனர், நல்லூர் நத்தத்தனர் ஆகிய எட்டுப் புலவர்கள் இப் பத்துப் பாடல்களையும் பாடியுள்ளார்கள். இந்நூல்களால் பாராட்டப்பெற்ற மன்னர்களோ சீரும் சிறப்பும் வாய்ந்து, பகைவரை வென்று, பாரகத்தே தம் ஒளி பரப்பியதோடு, கொடைநலமும் குணநிறைவும் கொண்டு வாழ்ந்த கொற்றவர்கள். மன்னன் கரிகால் வளவனும், பாண்டியன் நெடுஞ்செழியனும் இவ்விரண்டு பாடல்களால் பாராட்டப் பெறுகின்றனர். ஆரிய அரசன் பிரகத்தன், நல்லியக்கோடன், இளந்திரையன், நன்னன் ஆகிய சிறு மன்னரும், தெய்வமாகிய குமரவேளும் பிற பாடல்களால் பாராட்டப் பெறுகின்றனர். தமிழ்நாட்டு ஐந்திணையைப் பற்றிய விளக்கங்களும், அவற்றில் மக்கள் வாழும் வாழ்க்கை முறையும், அவர்கள் செயல்களும் பிறவும் பேசப்படுகின்றன. இவையன்றிப் பாடிய புலவனும், கேட்ட அரசனும் பற்றிய பொருள்களாகவே இவை அமைந்திருப்பின், இவை இத்தனை நாள் வாழ இடமில்லை. தெய்வத்தைப் பற்றியும், பேரரசர்களைப் பற்றியும் பாடப்பட்டனவாயினும், இவை அன்று வாழ்ந்த எளிய மக்களையும் மற்றவரையும் முன்னிறுத்தி,