பக்கம்:கவிதையும் வாழ்க்கையும்.pdf/279

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

282

கவிதையும் வாழ்க்கையும்



இனி அவ்வாடையில் நாடும் நகரமும் வாடும் வகையெல்லாவற்றையும் வாழ்வோடு பொருந்துமாறு காட்டி, பின்பு பாண்டிமா தேவியின் அந்தப்புரத்துக்கு நம்மை அழைத்துச் சென்று. நெடுஞ்செழியன் போர்மேற்செல்லத் தனித்துப் புலம்பும் பாண்டிமாதேவியின் பரிபவத்தையெல்லாம் காட்டும் காட்சி நம்மை நாம் மறக்க வைக்கின்றது. வாழ்வின் உள்ளத் துடிப்பை நக்கீரர் உணர்ந்து காட்டுகின்ருர். நமக்கு உற்றார் அருகிலில்லாதபோது, அத்தகைய உற்றார் இருவர் நம் எதிரில் செல்வராயின், கூடியிருக்கும் அவரையும் நம்மை விட்டுப் பிரிந்த மற்றவரையும் எண்ணி ஏங்குதல் மரபு. இதற்கு இன்றைய மனிதனும் விலக்கானவனல்லன். இந்த வாழ்க்கையின் உளப்பண்பைப் பாண்டிமாதேவியின் மேலேற்றிக் காட்டுகின்ருர் நக்கீரர்.

கணவனைப் பிரிந்து அந்தப்புரத்தே தனிமையில் புலம்புறும் அரசியின் நிலா முற்றத்தே வான வீதியில் சந்திரன் பவனி வருவது தெரிகின்றது. அந்த நாள் உரோகிணி நாள் போலும்! சந்திரன் உரோகிணியைச் சார்ந்து தழுவிச் செல்கின்றான். அந் நீலநிற வானமஞ்சத்திலே. அதைக்கண்ட அரசி தன் கணவனை எண்ணுகிறாள்; தன் தனிமையை நினைத்து மேலும் ஏங்குகிறாள். இதை நக்கீரர்,

'விண்ஊர்பு திரிதரும் வீங்குசெலல் மண்டிலத்து
முரண்மிகு சிறப்பிற் செல்வனொடு நிலைஇய
உரோகிணி நினைவனள் நோக்கி கெடிதுயிரா,
மாயிதழ் ஏந்திய மலிந்துவீழ் அரிப்புனி
செவ்விரல் கடைக்கண் சேர்த்திச் சிலதெறியாப்
புலம்பொடு வதியும் கலங்கிளர் அரிவை'

(நெடுநல், 161-166)

எனக் காட்டுகின்றார். இதில் ஒரு நற்கருத்தையும் பெய்கின்றார் அவர். உரோகிணியொடு திரியும் சந்திரனை வேறு வகையில் காட்டாது, ஞாயிற்றோடு மாறுபட்ட திங்களஞ் செல்வன் என்கிறார். சந்திரனுக்குப் பல பெயர்களும் பல சிறப்புக்களும் இருக்க, இந்த வகையில் கூறுவானேன்.