பக்கம்:கவிதையும் வாழ்க்கையும்.pdf/28

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

28

கவிதையும் வாழ்க்கையும்



கவிஞர் நாட்டுக்கு அணியானவர். எந்த நாட்டிலும் கவிஞர் போற்றப்படுகின்றனர். நாடு புரக்கும் நல்ல அமைச்சரினும், அரசரினும், கவிஞர் சிறந்தவர் என்பது எந்நாட்டவரும் கொண்ட முடிவுதானே! எனவே, கவிஞர் புவிக்கு அணியாகின்றனர். அவர்தம் பாடல்கள் நாட்டை என்றென்றும் வாழவைக்கின்றன. அப்பாடல்களில் முன் கூறியபடி சிறந்த பொருள்கள் விளங்குகின்றன. கண்டு, கேட்டு, உண்டு, உயிர்த்து, உற்று அறியும் ஐம்புலன்களின் நுகர்வும் நல்ல கவிதையிலே இடம்பெறல் வேண்டும். சிலர் சில பாடல்களை எண்ணியெண்ணிச் சுவைப்பதைக் கண்டிருக்கிறோமன்றோ! தன்னை மறந்த நிலையிலே வண்டியோட்டியின் வாய் முணுமுணுத்துப் பாடுவதைக் கண்டுள்ளோமே! அவ்வாறு மறந்த நிலையில், ஒன்றிய உணர்வில், மனிதனை ஆழ்த்துவதே கவிதை. ஆம்: அக் கவிதை, பயில்வார். ஐம்புலன்களையும் ஒருவழிப்படுத்துவதாக இருக்கவேண்டும். அப்பர்டல்கள் தமிழ்நாட்டு அகமும் புறமும் தழுவியனவாக அமையவேண்டும்; தமிழ் நாட்டுப் பண்புக்கு ஏற்றபடி ஐந்திணையின் நெறிகளையெல்லாம் விளக்கவேண்டும்; அழகு நிறைந்திருக்க வேண்டும்; அனைத்தினுக்கும் மேலாக, அமைதியும் ஒழுக்கமும் பெற்றுத் திகழவேண்டும்; இவையெல்லாம் கவியின் இயல்புகள் தாமே! இவற்றைக் கோதாவிரியின் வெள்ளப் பெருக்கிலே கண்டு கண்டு மகிழ்கின்றார் கம்பர். கவிதையையும் கோதாவிரியையும் ஒருமைப் படுத்திச் சிலேடையாகப் பாட்டிசைக்கின்ருர் கம்பர். அந்தப் பாடலையும் கவிதை என்னது வேறு என்ன என்பது?

‘புவியினுக்கு அணியாய் ஆன்ற
பொருள்தந்து புலத்திற் றாகி
அவிஅகத் துறைகள் தாங்கி
ஐந்திணை நெறிஅ ளாவிச்
சவியுறத் தெளிந்து தண்ணென்
றொழுக்கமும் தழுவிச் சான்றொர்
கவிஎனக் கிடந்த கோதா
விரியினை வீரர் கண்டனர்.’