பக்கம்:கவிதையும் வாழ்க்கையும்.pdf/280

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பத்துப்பாட்டு

283



சந்திரன் அவர்கள் குல முதல்வன். அக் குல முதல்வனோடு பொருந்திய செயல்கள் ஒன்றில் ஒன்றிய தலைவன் மற்றொன்றில் மாறுபட்டான். சந்திரனுக்கு மாறுபட்டவன் சூரியன். சந்திர குலத்துக்கு மாறுபட்ட குடி, சோழர் குடி. ஒருவேளை பாண்டியன் அதுகாலைச் சோழர்மேற் படையெடுத்திருக்கலாம். மாறுபாட்டில் இருவர் செயலினும் வேறுபாடு இல்லை. ஆனால், சந்திரன் அந்த மாறுபாட்டுக்கிடையிலும் தன் மனைவி உரோகிணியை விட்டுப் பிரியவில்லை. ஆனால், அச் சந்திர வமிசத்துத் தோன்றிய நெடுஞ்செழியனோ, பகல் இரவு, வேறுபாடு காணாது, முரண்மிகு போர்க்களத்திலிருந்து, வாட்டும் வாடையிலும்கூடத் தன்னைவிட்டுப் பிரிந்திருக்கின்றான். இது முறையாகுமா? என நைகின்றாள் அரசி. இவ்வாறு வாடையில் மணம் புரிந்த தலைவர் பிரியாதிருத்தல், முறையென்ற வாழ்க்கை நெறியை முன்னிறுத்திக் காட்டும் நக்கீரர் நெறி போற்றத்தக்க தன்றோ?

மற்றும் புலவர் இவ்வாடையில் கணவர் பிரிந்த மகளிர் ஆடை அணிகளால் தம்மைச் சிறப்புச் செய்து கொள்ளாது வாழும் வாழ்வையும் விளக்குகின்றார். பாசறையில் இருக்கும் மன்னன் நிலையைக் கூறி, வினைமேற் சென்றார் தலைவி போன்று நைந்து வாடாது, கடமை மறவாது செயலாற்ற வேண்டுமெனவும் குறிக்கின்றார். இவ்வாறு கடைச்சங்கப் புலவருள் தலைவராய நக்கீரர் இரண்டு பாடல்களில் கடவுள் நெறியையும், கற்பு நெறியையும், வீரர் வாழ்வையும், நன்மக்கள் செயல்களையும், அவை வாழ்வோடு பின்னிய வகையினையும், காட்டி விளக்குவது அறிதற்பாலதாகும்.

இனி, நாம் பிற நான்கு ஆற்றுப்படைகளையும் காணல் வேண்டும். அவை அனைத்தும் மேலே கண்டபடி, பொருள் பெற்றான் ஒருவன் பெறாதானுக்குப் பெறும் வழி காட்டும் வகையில் அமைந்தனவே. அவ்வழிகாட்டு முகத்தான் அவ்வக் கவிஞர் கன்னித் தமிழ்நாட்டு வாழ்க்கைக்கே வழி காட்டுகின்றனர்: தமிழ்நாட்டு நிலப்பிரிவாகிய ஐவகை நிலங்களையும் கூறி, அவ்வந்நிலத்து வாழும் மக்களின் வாழ்க்கை முறை