பக்கம்:கவிதையும் வாழ்க்கையும்.pdf/284

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பத்துப்பாட்டு

287



இவ்வாறு நானிலத்திலும், அவற்றைச் சார்ந்த இடங்களிலும் வாழும் மக்கள் விருந்தோம்பும் வாழ்க்கையை விளக்கும் இவை வாழும் கவிதைகள் தாமே! ஒவ்வோர் இடத்தையும் குறிக்கும்போது, அதில் வாழும் அவ்வகைப்பட்ட மக்களையும், அவர்கள் பழக்க வழக்கங்களையும், பண்பாட்டு நலன்களையும் நன்கு விளக்கிக்கொண்டே போகின்றார் ஆசிரியர்.

இவ்வாறே மலைபடுகடாம் என்னும் கூத்தராற்றுப் படையில் வழிநெடுக வாழும் மக்களினம், வந்தார்க்கு வரிசையறிந்து, வகைவகையாக உணவிடும் தன்மையையும், அவர்களை விட்டு நீங்காதிருக்க விரும்பும் நல்ல விழைவினையும் பெருங் கெளசிகனார் பலவாறு பாராட்டுகின்றார். ஆறலைக்கும் கொடுந்தொழில் புரியும் வேடுவர்கூடத் தம் கொள்ளையையும் கொலையையும் மறந்து, வீடு தேடி வந்த விருந்தினரை உபசரிக்கும் சிறப்பும், அவ்விருந்தினர் நெடுவழிச் செல்லின் துன்பம் விளையும் என்று தாமே வழிகூட்டிக் கொடுங்காட்டு எல்லை கடக்கும் வரையில் துணையாக அமையும் காட்சியும் அறிந்தறிந்து இன்புறத்தக்கன. இவ்வாறு எல்லா நிலத்திலும் வாழ்கின்ற மக்கள் வாழ்க்கை வகைகள் அனைத்தும் பின்னிச் செல்லும் காட்சியோடு, இக் கவிதைகள், அவற்றின்மூலம் மக்கள் வாழ்க்கை-எந்நிலத்து எவ்வாறு அமையினும்-அந் நிலத்து அவரவர் நிலைக்கேற்ப மற்றவருக்கு உதவுவதற்காகவே என்பதை நன்கு எடுத்துக் காட்டுகின்றன. இதனினும் வாழ்க்கையோடு இயைந்த வளமார் கவிதையும் உண்டோ!

இனி, இவ்வாற்றுப் படைகளுள் இறுதியாகச் செல்வர் வாழ்க்கை எவ்வாறு அமைய வேண்டுமென்று, அவ்வப் பாட்டுடைத் தலைவரை முன்னிருத்திக் கவிஞர்கள் காட்டுகின்றார்கள். விருந்தினர்தம் எளிமையான தோற்றத்தை முன்னர்க் காட்டி, அவரை ஏற்கும் அரசன்-வள்ளல் ஆகியோர் தோற்றத்தைப் பின்னர்க் காட்டி, இரண்டிற்குமுள்ள வேறுபாட்டுக்கிடையில் நம்மை நிற்க வைத்து, இத்துணை வேறு பாட்டுக்கிடையிலும் நல்லறம் ஆற்றும் பண்பட்ட உள்ளம்