பக்கம்:கவிதையும் வாழ்க்கையும்.pdf/286

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பத்துப்பாட்டு

289



காலம் இடம் பெறுகின்றது. முல்லைக்கு மாலையும் கார் காலமுமே பொழுதுகள். எனவே, அவை சிறந்தவகையில் இப்பாடலில் காட்டப்படுகின்றன. தலைவனோ, போர்மேற் சென்றுவிட்டான். தலைவியோ வீட்டில் அவன் கூறிய நாள் எண்ணி நலிகின்றாள்: 'கார் கலத்துக்கு முன் வருவேன்' என்று கூறிய தலைவன் வரவில்லையே என ஏங்குகின்றாள். எனினும், அவன் சொற்கடவான் என்ற காரணத்தால் ஆற்ற நினைக்கின்றாள். ஒருநாள் மாலைக்காலம் தொடங்கி, அடுத்த நாள் விடியும் வரையிலுமுள்ள அந்தப் பொழுதே கவிதை முழுவதும் ஆட்சி செலுத்துகிறது. மாலையில் முல்லை மலர, தூறல் தொடங்க, அதைக் கண்டு தலைவி மாழ்க, இயல்பாய் அமைந்த அந்த நிலக் கோவலர் கன்றுகளை நோக்கித் 'தாயர் இன்னே வருகுவர்", என்று கூறியதே விருச்சியாகக் கொண்டு, செவிலியர் தேற்றவும் தேறாளாய் மாலையைக் கடந்து இரவில் வாடுகின்றாள் தலைவி. நெடுநல்வாடைத் தலைவியின் வருத்தம் இங்கும் பேசப்படுகின்றது. அதைப் போன்றே, தலைவன் போர்க் களத்து வினையின் இறுதி நாளிலே நின்று, 'நாளை எப்படியும் போர் முடித்துத் தலைவியைக் காணவேண்டும்' என்ற கருத்தில் இரவெல்லாம் உறங்காது, சூழ வேண்டியவரோடு சூழ்ந்து, படுத்தும் உறக்கம் கொள்ளாது, ஒரு கை ஊன்றிய நிலையில் அவன் இருக்கப் பொழுது விடிகின்றது. விடிந்த நிலை கண்ட தலைவி, தன் செயலுக்கு நாணித் தலைவன் அன்றே எப்படியும் வருகுவன் என்று ஆற்றியிருக்கின்றாள். இந்த ஓர் இரவின் நிகழ்ச்சியை வைத்து நப்பூதனர் அழகிய கவிதையை யாத்துவிட்டார். இதில் மாலைக்கால இயற்கையின் சிறப்பும், முல்லை நில மக்களின் மாலை வாழ்வும், தனித்தவர் துனியும், இரவின் நிலையும் விளக்கப்படுகின்றன. அவை போன்றே அக் காலப் போர்க்களங்க்ள் இராக்காலத்தில் எப்படியிருக்கும் என்று அரசனது போர்க்களத்தைக் காட்டுகின்றார் புலவர். அக் குளிரில் சோர்ந்து நிற்பார் நிற்க, வினையாற்றுபவர் அவ் விரவிடையும் உறங்காது காவல் வினையை ஆற்ற, சென்ற நாளையும் வரும் நாளையும் எண்ணி எண்ணி மன்னரும் தலைவர் பிறரும் ஆழ்ந்து சிந்தித்துப் பின்,