பக்கம்:கவிதையும் வாழ்க்கையும்.pdf/29

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவிதையும் கவிஞனும்

29


என்பது கம்பர் பாட்டு. கோதாவிரியினை வீரராகிய இராமனும் இலக்குவனும் கண்டார்கள் என்பது அவர் கூற விரும்புவது. அந்த வீரராகிய இராமனும் இலக்குவனும் அந்த ஆற்று வெள்ளத்தை எப்படிக் கண்டார்களோ நாமறியோம். ஆனால், கவிஞர் அதைக் கவிதையாகக் காண்கின்றார். கோதாவிரி, புவிக்கு அழகாகப் பல பொருள்களை ஈர்த்துக் கொண்டு, சூழ்ந்துள்ள நிலங்களில் தாவிப் பாய்ந்து, உள்ளிடங்களுக்கும் சென்று, முல்லை முதலிய ஐந்திணை நிலங்களில் உருண்டோடி, அழகாக ஒடிச் செல்லும் வெள்ளத்தையுடையது என்பது ஆற்றுக்குப் பொருந்துவதாகும். ஆனால், அதுவே கவியாகும்போது எவ்வளவு சிறக்கின்றது! ஆறு உண்டான அந்த நாள் முதல் அதைக் கோடிக்கணக்கான கண்கள் காண்கின்றன ; அவைகளெல்லாம் அவ்வெள்ளத்தில் நிறைவையும் நுரையையும் கண்டன. ஆனல், கவிஞரின் கண்களோ வெள்ளத்தில் கவியையே கண்டன. அதன்மூலம் உண்மைக்கவி எவ்வாறு இருக்கவேண்டும் என்பதை எவ்வளவு தெள்ளத்தெளியக் கவிஞர் கம்பர் உணர்த்திவிட்டார்.

ஆம். கவிஞர்கள் இப்படிப்பட்டவர்களே; சாதாரண மனிதர்கள் காணமுடியாத பல உண்மைகளை உலகுக்கு உணர்த்துபவர்களே. இவ்வுண்மை தமிழ்க் கவிஞர்களுக்கு மட்டுமின்றி, உலகக் கவிஞர் அனைவருக்குமே பொருந்துவதாகும். இந்த அடிப்படையிலே கவிஞர். உலகை ஒன்றிய உணர்வில் காண்கின்றனர். கவிஞர்களுக்கு நாடும் ஊரும் வேற்றுமை உணர்ச்சியை வளர்க்கமாட்டா! ‘யாதும் ஊரே: யாவரும் கேளிர்,’ என்று பாடியவன் ஒரு தமிழ்க்கவிஞன் தானே! அவன் உலகுக்கு ஒருமையைத்தானே உணர்த்துகின்றான்! அன்று மட்டுமன்றி இன்றும் கவிஞன் உலக ஒருமையையே தன் வாழ்வாகக் கொண்டு வாழ்கின்றான். உலகில் வாழும் மனிதனை மட்டுமன்றி, விலங்கையும் பிற உயிர்களையும் ஒத்து நோக்கும் பண்பாடு கவிஞன் உள்ளத்தே முகிழ்க்கும் ஒரு பண்பாடுதானே? அறம் உரைத்த வள்ளுவே, ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்,’ என்று உயிரினத்திலர்