பக்கம்:கவிதையும் வாழ்க்கையும்.pdf/291

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

294

கவிதையும் வாழ்க்கையும்


கூட்டுண்டு பயன்பெறு நகர் என அது விளங்கிற்று எனலாம் வான் பொய்ப்பினும் தான் பொய்யாக் காவிரிக் கரையிலே, பல்வேறு நாட்டு மக்களும் வாணிகத்தின் பொருட்டு வந்து கலத்திருக்க, மருவூர்ப்பாக்கம் பட்டினப்பாக்கம் என்ற இருபகுதிகளைக் கொண்ட அக்காவிரிப்பூம்பட்டின வாழ்க்கையைக் காட்டி, இதுவே பண்டைத் தமிழர்தம் கடற்கரைப்பட்டின வாழ்க்கை என்பதை நன்கு விளக்கியுள்ளார், உருத்திரங்கண்ணனார் என்ற அந்தப் பெரும் புலவர். துறைமுகத்தே பண்டங்களை இறக்கி ஏற்றும்போது தொழிலாற்றும் சுங்கச், சாவடிகளில், பண்டங்களின் மேல் ‘புலி’ இலச்சினை இடும் வழக்கம், இன்றைய சுங்கச் சாவடியை[1] நமக்கு நினைப்பூட்டுகின்றதன்றோ! இலங்குநீர் வரைப்பில் கலங்கரை விளக்கம்[2] கப்பல்களைக் கரைக்கு வருமாறு அழைக்கும் இன்றைய விளக்குகளை நம்முன் கொண்டு வந்து நிறுத்துகின்றன. இன்னும் எத்தனையோ வகையில் அப்பட்டினம் பேசப்படுகின்றது.

உருத்திரங்கண்ணனார், சோழன் கரிகாலனைப் பாட வந்தவர், பாட்டின் இறுதியிலே அவனையும் பாடுகிறார் எனினும், கவிதை முழுதும் அவனைப்பற்றியே அமைந்திருப்பின், அது என்றோ மறைந்துவிட்டிருக்கும். ஆனால், அவனை முன்னிறுத்தி, அவன் தலைநகரின் நலன் கூறுவதன் வழி, தமிழ்நாட்டுக் கடற்கரைப்பட்டினத்தின் வாழ்க்கை நிலையையே ஒன்றாக திரட்டிக் காட்டுவதாலன்றோ அவர் கவிதை இன்றும் வாழ்கின்றது! ஆகவே, மன்னரைப் பாடினும், அவர் மக்கள் வாழ்க்கையைப் பாடிய புலவரே ஆவர்; எனவே, என்றும் வாழ்பவராவர்.

இறுதியாக மதுரைக் காஞ்சியைக் கண்டு இப்பகுதியை முடிப்போம். 'காஞ்சி' என்ற சொல்லுக்கு 'நிலையாமை' என்னும் பொருள் உள்ளதை மேலே புறம்பற்றி ஆயும் போதே கண்டோம். இங்கு ‘மதுரைக்கு நிலையாமை


  1. 1. Custom House
  2. 2. Light House