பக்கம்:கவிதையும் வாழ்க்கையும்.pdf/296

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



 

3. எட்டுத்தொகை


மிழ் இலக்கியத்திலேயே—தமிழ்க் கவிதை உலகிலேயே—இந்தத் தொகுதிதான் மிகச்சிறந்ததாகப் போற்றப்படுகின்றது. இத்தொகுதியைக் கொண்டுதான் வரலாற்று ஆசிரியர்கள் தமிழ்நாட்டுப் பண்டைய வரலாற்றை ஆராய்கின்றார்கள். தமிழ் நாட்டில் வாழும் உணர்வுடையாரும் இத்தொகுதி கொண்டேதான் தமிழர் பண்பாடு, கலாசாரம்'என்றெல்லாம் பேசிப் பெருமை கொள்ளுகின்றனர். இத்தொகுதியில் உள்ள எட்டுத்தொகை நூல்களைப்பற்றிய ஆராய்ச்சி நூல்களும், உரைநடைகளும், விளக்கங்களும் வெளிவந்து கொண்டேயிருக்கின்றன. இன்னும் பலப்பல புது நூல்களும் வர வழியிருக்கின்றது. இத் தொகை நூல்களுள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு பேரிலக்கியமாய் விளங்குகின்றது. இவற்றில் அகம் புறம் என்ற இரு பொருளுமே பேசப்படுகின்றன. புறநானூறு, பதிற்றுப்பத்து ஆகிய இரண்டும் புறப்பொருள் பற்றிப் பாடுவன. இவை இரண்டுமே ஓர் அரசனையோ, குறுநில மன்னனையோ, வள்ளலையோ, வீரனையோ பற்றிப் பாடப்பட்டவை. தனிப்பட்ட ஒருவனைப்பற்றிய பாடலாய் இருப்பினும், அப் பாடலுள் தமிழ்நாட்டு அன்றைய மக்கள் நிலை, பழக்க வழக்கம் ஆகியவற்றைக் காண வகை இருக்கின்றது. வாழ்வாங்கு வாழும் அறநெறியும் பிறவும் பேசப்படுகின்றன. இவ்விரண்டைத் தவிர்த்த மற்றைய ஆறு தொகை நூல்களும் அகப்பொருள் பற்றியனவே. ‘அகம்’ என்ற சொல்லே உள்ளத்தைக் குறிப்பதன்றோ! வாழ்க்கையில் கூடி வாழும் தலைவன் தலைவியரை முன்னிறுத்தி, தமிழ் நாட்டு வாழ்க்கை நுணுக்கங்கள் அத்தனையும் இவற்றுள் காட்டப்படுகின்றன. இவற்றைப் பாடிய புலவர்- பல்லோர்.