பக்கம்:கவிதையும் வாழ்க்கையும்.pdf/299

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

302

கவிதையும் வாழ்க்கையும்


இடரையும், காதலன் கவானில் துஞ்சும் இன்பத்தை எண்ண இல்லையாகும் என உன்னுகின்றாள். அவள் உள்ளத்து நினைப்பினைத் தலைவனுக்குத் தோழி கூறுமாற்றால்,

'நீர்க்கால் யாத்த நிரையிதழ்க் குவளை
கோதை ஒற்றினும் வாடா தாகும்;
கவணை யன்ன பூட்டுப்பொரு தசாவா
உமணர் ஒழுகைத் தோடுநிரைத் தன்ன
முளிசினை பிளக்கு முன்பின் மையின்
யானை கைம்மடித்து உயவும்
கானமும் இனியவாம் நும்மொடு வரினே.' (குறுந்-388)

என்று ஒளவையார் அழகுபடக் காட்டுகின்றார். இவ்வாறு தலைவன் தலைவியின் உட்கோளறிந்து தலைவியைத் தன் ஊருக்கு அழைத்துச் சென்றுவிடுகின்ருள். தலைவியை வீட்டில் காணாது அனைவரும் கவல்கின்றனர். பாவம் அவளை வளர்த்த செவிலித் தாய்க்கு வருத்தம் மிகுகின்றது. அவள் வழிநெடுகத் தேடிச் செல்கின்றாள். தோழி அறத்தொடு நின்ற காரணத்தால், தலைவி சென்ற வழி செவிலிக்குத் தெரிகின்றது. அவள் முன்பு பலமுறை தலைவியின் களவு மணத்தைத் தோழி குறிப்பாக உணர்த்திய காலத்திலெல்லாம் தான் உணர்ந்து செயலாற்றாததை எண்ணிக் கவல்கின்றாள். கவன்று என் செய்வது? வேறு வழியின்றித் தலைவி தலைவனோடு சென்ற வழியறிந்து அவ்வழியே நெடுந்துாரம் தேடிச் செல்கின்றாள். வழியிடைக் காணும் மக்களை மட்டுமன்றி, மரத்தையும், புள்ளையும், விலங்கையுங்கூட விளித்து, அவை தலைவியைக் கண்டிருக்கக்கூடுமோ என வினவுகின்றாள். அவை எப்படி வாய் திறந்து பேசும்? வழியிடைச் சிலர் கண்டதாகப் பேசுகின்றனர். சிலர் அவளைத் தேற்றுகின்றனர். அவையெல்லாம் கேட்டு உள்ளம் அமைதி பெறவில்லை செவிலிக்கு. அவள் மேலும் கலுழ்ந்து கலுழ்ந்து தேடுகின்றாள். ஆனால், அவள் எதிரில் வருவார் சிலர், தலைவி நீங்கியது சரியே எனக் காரணம் காட்டி விளக்குகின்றனர். அவர்கள் காட்டிய உவமைகள் சிறந்தன. அவற்றையும் காண்போம்;