பக்கம்:கவிதையும் வாழ்க்கையும்.pdf/302

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

எட்டுத்தொகை

305


காட்சிகள் பல இத்தொகுதிகளில் காண்கின்றன. இன்று உலகில் வாழும் வாழ்க்கையே இதுதானே? ‘இல்லற மல்லது நல்லற மன்று’ என்றபடி, பெரும்பாலோர் வாழும் வாழ்க்கை இல்லற வாழ்க்கையன்றோ? அவ் வாழ்வில் தலைவனோடு கூடியிருக்கும் தலைவியின் நிலையும், அவனைப் பிரிந்திருக்குங்கால் அவள் தனிமையில் பெறுநிலையும் காணத்தக்கன. அவனொடு கலந்து வாழ்வதில் அவள் கொள்ளும் பெருமிதமும், அவளொடு கூடி வாழ்வதில் அவன் கொள்ளும் உவகைச் சிறப்பும் அனைவராலும் உள்ளத்து உணரற்பாலன எனினும், கவிஞர்தம் கருத்தும் கையும் பிணைந்த வனப்பின் வழி இரண்டொன்றைக் காணல் நலம் தருவதாகும்.

காதலி கணவனுக்கு அன்போடு சமைத்து ஊட்டுகின்றாள். அவள் உணவில் சோறும் கறியும் விரவி வருவதோடு, அவளது அன்பும் தோய்கின்றது. அதை உண்டு கொண்டே கணவன், ‘நன்று!’ என்று அவள் கைந்நலமும் செய்நலமும் பாராட்டுகின்றான். அதைக் கண்டும் கேட்டும் அகமகிழ்கின்றாள் அத் தலைவி. இக்காட்சியை மக்கள் அனைவரும் தத்தம் வாழ்வில் கண்டிருப்பார்கள். எனினும், இதையே கூடலூர் கிழார் என்னும் புலவர்,

“முளிதயிர் பிசைந்த காந்தள் மெல்விரல்
கழுவுறு கலிங்கம் கழாஅ துடீஇக்
குவளை உண்கண் குய்ப்புகை கழுமத்
தான்துழந்து அட்ட தீம்புளிப் பாகர்
இனிதெனக் கணவன் உண்டலின்
நுண்ணிதின் மகிழ்ந்தன்று ஒண்ணுதல் முகனே!"

(குறுங். 167)


என அழகுபடக் காட்டும்போது, அதன் கவின் மிகச் சிறப்பாக அமைகின்றதன்றோ? ஆம். அத்துணை இன்பம் அவளுக்கு! அவனுக்கு உணவு ஆக்கிப் படைக்கும்வழி தன் நெகிழ்ந்த ஆடையைச் சரி செய்துகொள்ளக்கூட நினைக்கவில்லை அவள். கைப்பணி யிடையில் கண்புகை படிந்தும் கவலையுறவில்லை