பக்கம்:கவிதையும் வாழ்க்கையும்.pdf/304

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

எட்டுத்தொகை

307


கடனாகும்; அதனுடன் அவளை விட்டுப் பிரிய நினையாத தன் நெஞ்சையும் ஆற்றித் தேற்றல் வேண்டும். அவ்வாறு தேற்றுவனவாகப் பல பாடல்கள் நற்றிணையில் உள்ளன. பொருள் இன்பத்திற்கு இன்றியமையாதது என உணர்த்துகிறது அவன் நெஞ்சம். எனினும், இளமையில் காமத்தை நோக்கப்பொருள் பெரிதல்லவே! என அவன் நினைக்கின்றன். தலைவியைப் பிரிதலஞ்சி, அந் நெஞ்சை முன்னிறுத்தி, அவன்,

‘இறந்துசெய் பொருளும் இன்பம் தரும்எனின்,
இளமையிற் சிறந்த வளமையும் இல்லை;
இளமை கழிந்த பின்றை வளமை
காமம் தருதலும் இன்றே; அதனால்
நில்லாப் பொருட்பிணிச் சேறி
வல்லே நெஞ்சம்! வாய்க்கநின் வினையே!’
(நற்றிணை. 126)

என்று, ‘என் காதலியை விட்டு, இளமைக் காலத்தில் வர மாட்டேன்!’ என்று நினைத்து தலைவி முகம் நோக்குகின்றான்; இக்கருத்தைத்தான் பூதனார் என்ற புலவர் வேறொரு வகையில்,

'இன்பமும் இடும்பையும் புணர்வும் பிரிவும்
நன்பகல் அமயமும் இரவும் போல
வேறுவேறு இயல வாகி மாறெதிர்ந்து
உளவென உணர்ந்தனை யாயின் ஒருஉம்
இன்ன வெஞ்சுரம் நன்ன்சை துரப்பத்
துன்னலும் தகுமோ துணிவுஇல் நெஞ்சே
நீசெல வலித்தனை யாயின், யாவதும்
நினைத்தலும் செய்தியோ எம்மே?’ (அகம். 327)


என்று காட்டுகின்றார். எனினும், சிலகாலம் தலைவியொடு கூடியிருந்து, பொருள் கருதியும் தலைவன் பிரியத்தானே வேண்டும். இன்றேல், வாழ்க்கைக்குப் பொருள் பெற வழி வேண்டுமே! அவ்வாறு பிரியும் காலத்திலெல்லாம் தலைவி வருந்தி நிற்பாள். செல்லும் வழியெல்லாம்,