பக்கம்:கவிதையும் வாழ்க்கையும்.pdf/305

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

308

கவிதையும் வாழ்க்கையும்



'மழைதுளி மறந்த அங்குடிச் சீறூர்ச்
சேக்குவங் கொல்லோ நெஞ்சே! பூப்புனை,
புயலென ஒலிவருந் தாழிருங் கூந்தல்
செறிதொடி முன்கைநங் காதலி
அறிவஞர் நோக்கமும் புலவியும் கினைந்தே? (அகம். 225)

எனக் கூறி நிற்பான். தலைவியோ, அவனைப் பழிக்கும். அளவிற்கு,

'உள்ளின் உள்ளம் வேமே உள்ளாது
இருப்பின்எம் அளவைத் தன்றே! வருத்தி
வான்றோய் வற்றே காமம்!
சான்றோ ரல்லர்யாம் மரீஇ யோரே.’ (குறுங். 102)

என்று கூறுவாள். இது தன் தலைவனைப் பழித்ததாகக் கொள்ளத் தக்கதன்றாகும். அவ்வாறு கூறின், கற்பு நிலைக்கும் ஏதம் படும். எனவே, தன் துன்ப எல்லையில் அவள் உள்ளத்தின் எல்லையை விளக்க அமைந்த சொற்களன்றி, பழிச்சொற்களல்ல இவை. ஏனெனில், தன் உயிர்த்தோழியிடத்துங்கூடத் தன் கணவனைப்பற்றியும், அவன் நாட்டைப்பற்றியும் சிறப்பாகப் பேசுவதல்லது பழித்துரைத்தல் அவள் மரபன்று. உடன் போக்கில் தலைவன் ஊர் சென்று வந்தவளைத் தோழி, உன் தலைவன் ஊரின் நீர் நல்ல தல்லவே? எப்படி நுகர்ந்தாய்?’ என்று கேட்டதற்கு,


அன்னாய் வாழிவேண்டு அன்னை! நம் படப்பைத்
தேன்மயங்கு பாலினும் இனிய அவர்நாட்டு
உவலைக் கூவற் கீழ
மானுண்டு எஞ்சிய கலிழி நீரே.’ (ஐங்குறு. 203)

என்று பெருமைப்படப் பேசுகின்றாள். இப்படிப்பட்டவள் தலைவனை பழித்துரைப்பாளோ! மேலும், தலைவன் தம் மாட்டு அன்பிலன் என்ற தோழியை நோக்கிக் களவுப் புணர்ச்சிக் காலத்தில் தலைவி,