பக்கம்:கவிதையும் வாழ்க்கையும்.pdf/311

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

314

கவிதையும் வாழ்க்கையும்


கவிதையும் அது சிறந்தது எனப் பாடவில்லை என்பது தேற்றம். பாராட்டப் பெறாத வாழ்வின் மாசு காட்டும் இப்பரத்தமை வாழ்வைப்பற்றி நாமும் ஒன்றும் தொடாது மேலே செல்வோம்.

இனி, இவ்வாறு களவுவழி கற்புநலம் பெற்றுக் காதன் மனையாளும் காதலனும் சிறக்க வாழ அவர்கட்கு மகப்பேறு வாய்க்கின்றது. மங்கலமாகிய மனைமாட்சியைச் சார்ந்து தோன்றுவது அதன் நன்கலகிைய நன் மக்கட்பேறு அன்றோ! பின்னர் அக் காதலர் தம்மைச் சுற்றிய உலகை நோக்கிப் பொருள் ஈட்டி அறமாற்றத் தொடங்குகின்றனர். அந்தப் பொருளும் அறமுமே புறம் என்று பேசப்படுவன. அகப் பொருள்பற்றி ஆராயின், அது நெடிது வளர்ந்து கொண்டே போகுமாதலின், இவ்வளவோடு அதை நிறுத்தி, இனிப் புறம் பற்றியும் சிறிது காண்போம்.

அறமும் பொருளும் பற்றியும், வீடு பற்றியும் விளக்குவனவெல்லாம் புறமென்பதைக் கண்டோம். இந்த எட்டுத்தொகை நூல்களுள்ளே பதிற்றுப்பத்தும் புறநானூறுமே புறம்பற்றிப் பாடுவன. இவற்றுள்ளும் பதிற்றுப்பத்து, சேரர் பரம்பரையைச் சேர்ந்த மன்னர் பதின்மரைப் பத்துப்புலவர்கள் பாடிய பாடல்களே. அவற்றுள்ளே முதற்பத்தும் இறுதிப்பத்தும் கிட்டவில்லை. மிஞ்சிய எண்பது பாடல்களும் எட்டு மன்னரைப் பற்றியன. அவர்தம் வீரத்தைப் பற்றியும், வெற்றி பற்றியும் கொடை பற்றியும், பிற சிறப்புக்கள் பற்றியுமே பேசுகின்றன. பொதுவாக மக்கள் வாழ்க்கையை அது அவ்வளவாக விளக்கவில்லை. அதனாலேதான் போலும், புறநானூறு போன்று, அத்தனை விரிந்த அளவில் அது இன்று மக்களோடு தொடர்பு கொள்ளாமல் இருக்கின்றது; அரசர்க்கு அறம் கூறும் வகையில் சிற்சில அடிகள் பொதுவான கருத்துக்களைக் கொண்ட போதிலும், அவை அத்துணைச் சிறப்பின்மையின், வழக்கத்தில் பயின்று வருதல் இல்லை. மற்றும் அப் பாடல்கள் தோன்றிய நாடு தமிழ் வழங்கும் நாடாய் இல்லை. அப்பாடலைப் பெற்ற அரச பரம்பரையும் இல்லை. எனவே, ஓரளவு அவை போற்றப்படாது விடப்பட்டன போலும்! எனினும்,