பக்கம்:கவிதையும் வாழ்க்கையும்.pdf/316

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

எட்டுத்தொகை

319


உள்ளத்தை வாட்டி வதைக்கும். அந்த வாட்டத்தால் அஞ்சாது அரசரிடம் சென்று, அவர் சொந்த விஷயமென்று பேசினலும், அதிலும் தவறு எடுத்துக் காட்டித் திருத்துவர். ஒன்று காணலாம்:

பேகன் கடையெழு வள்ளல்களுள் ஒருவன். உயிர் அனைத்தும் ஒன்று என்ற உணர்வில் மனித இனத்தைக் கடந்து மயிலினத்துக்கும் உதவியவன். குளிரில் மயில் மேகம் கண்டு தோகை விரித்தாடி மகிழ, அது குளிரால் நடுங்குகிறதென்று தன் பொற்போர்வையை அதற்கு அளித்தவன். அப்படிப்பட்ட வள்ளல் எப்படியோ ஒழுக்க நெறியிற் தவறிவிட்டான்: கொண்ட மனையாளை விட்டுப் பரத்தை மையலிலே தாழ்ந்து விட்டான். அம்மன்னனுக்கு அவ்வொழுக்கக் கேட்டை யாரே காட்டி விலக்க முடியும்? அனைவரும் அஞ்சினர். ஆனல், பரணர் என்னும் பெரும்புலவர், அஞ்சாது அவனிருக்குமிடம் சென்று, அவன் குற்றம் காட்டித் திருத்தி, அவன் மனைவியாகிய கண்ணகியோடு அவனை வாழவைத்தனர்.

‘மடத்தகை மாமயில் பனிக்குமென் றருளிப்
படாஅம் ஈத்த கெடாஅ நல்லிசைக்
கடாஅ யானைக் கலிமான் பேக!
பசித்தும் வாரேம், பாரமும் இலமே;
களங்கனி யன்ன கருங்கோட்டுச் சீறியாழ்
நயம்புரிந் துறையுநர் நடுங்கப் பண்ணி
அறஞ்செய் தீமோ அருள்வெய் யோய்!’ என
இஃதுயாம் இரந்த பரிசில், அஃது இருளின்
இனமணி நெடுந்தேர் ஏறி
இன்னது உறைவி அரும்படர் களைமே.’ (புறம், 145)

என்று, தாம் அவனிடம் பரிசில் ஒன்றையும் எதிர்பார்த்து வரவில்லை எனக்கூறி, அவன் மனைவி தனிமையில், வாடும் வருத்தத்தைப் போக்கல் வேண்டும் என வற்புறுத்தி, அவனை அவன் மனைவிடம் சேர்த்தனர். ஆம்! இவ்வாறு,

‘அறத்துக்கே அன்புசார் பென்ப அறியார்
மறத்துக்கும் அதே துணை.’