பக்கம்:கவிதையும் வாழ்க்கையும்.pdf/324

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



 

4. குறள்


மிழ்க் கவிதை உலகிலேயே தலை சிறந்தது குறள் என்பர். நாம் இதுவரையில், மேலே எத்தனையோ குறட்பாக்களை எடுத்து ஆண்டிருக்கின்றோம். மூன்றெழுத்துக்களாலான தனது பெயர் போன்றே நூலும், மிகக் குறைந்த அளவினைக் கொண்டுள்ள பாடல்களால் ஆயது; குறுகிய அடிகளைப் பெற்றமையினலே பாடல் குறட்பாவாயிற்று, நூலும் குறளாயிற்று. இந்நூல் சங்க நூல் என்று பேசப்படாவிடினும், சங்கச் சான்றேர்களெல்லாம் இந்நூற் கருத்துக்களையும், சொற்ருெடர்களையும் தங்கள் நூல்களில் ஆண்டிருக்கிறார்கள். இந் நூலாசிரியரைப் ‘பொய்யில் புலவர்’ என்றும், இந்நூலை 'அறம்' என்றும் கூறும் சங்கப் புலவர்தம் பாடல்கள் உள்ளன. இந்நூலின் காலம் இன்றைக்கு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னது என்பர். இந் நூலின் பெருமையைப் பலர் பலவகையாகப் புகழ்ந்து கொண்டே யிருக்கின்றனர். இந் நூலைப்பற்றி ஆராய்ச்சி உரைகளும் விளக்க உரைகளும் வெளிவந்து கொண்டேயிருக்கின்றன. இந்நூலை உலகில் பிற மொழிகளில் பலர் மொழி பெயர்த்துள்ளனர். இந்நூலில் இல்லாத பொருள் ஒன்றும் இல்லை என்பது உலகறிந்த உண்மை. எனவே, இந்நூல் வாழ்க்கைக்கு எத்துணை இன்றியமையாதது என்பது கூறவும் வேண்டுமோ! திருக்குறளையே வாழ்க்கை நூலாக ஆராய்ந்து எழுதிய நூல்களும் பலப்பல வந்துள்ளன. குறள் வாழ்வோடு பின்னிக்கிடக்கும் வகையினைப் பள்ளியிற்பயிலும் பிள்ளை முதல் அனைவரும் அறிந்துள்ளனர். ஆகவே, நாம் அதுபற்றி அதிகம் ஆராய வேண்டா. எனினும், எடுத்த பொருளுக்கு ஏற்ப ஓர் அளவு ஆராய்ந்து தொடர்ந்து செல்லலாம்.