பக்கம்:கவிதையும் வாழ்க்கையும்.pdf/332

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

குறள்

335


உயிர்களெல்லாம் எக்கேடு கெட்டால் எனக்கென்ன?’ என்று இராது, தான்மட்டும் சிறக்க வாழ்ந்தால் போதும் என்ற எண்ணத்தில் செம்மாக்காது, உலகைத் தழுவியே செல்ல வேண்டுவதுதான் அறிவின் பயன்.

இனி, ‘அறிவு எதற்குப் பயன்பட வேண்டும்? தேர்வில் வெற்றி பெற்று முதல் மாணவனாய் வருவதற்காகவா இது பயன்பட வேண்டும்?’ என்று கேட்கிறார். இல்லை என்ற விடையையும் அவரே கூறிவிடுகின்றார். பின் அறிவுதான் எதற்கு?

'அறிவினான் ஆகுவது உண்டோ பிறிதின்நோய்
தங்நோய்போல் போற்றாக் கடை (குறள். 315)

என்ற குறனிலேதான் வாழ்வின் நுணுக்கத்தை அறிவின் மேல் ஏற்றி அமைத்துச் சென்றுவிட்டார். நாம் வருந்துகின்றோம். அவ் வருத்தம் நம் உள்ளத்தைச் சுடுகின்றது ஆனல், நம் எதிரிலேயே மற்றவர் வருந்தும்போது, நாம் கவலையற்று மகிழ்ச்சியில் திளைக்கின்றோம். ஒரில் நெய்தல் கறங்க, ஒரில் மகிழ்ச்சி சிறக்கும் காட்சி இன்று உலகில் பல 'அவற்றையா மனித வாழ்வு விரும்புகின்றது?’ என்று கேட்கின்றார் அவர். அந்த வகையில் பிற உயிர்வாடத் தான் மகிழ்ந்திருப்பவன் யாவனயினும், எத்துணைப் படிப்பும் பட்டமும் பெற்று அறிஞன் எனப் பெயர் வாங்கியவனே ஆனாலும், அந்த அறிவினால் என்ன பயன்? அவன் அறிவிழந்தவனே ஆகின்றான் என்கின்றார். எனவே, பிறிதின் நோய் தம் நோயாகப் பேர்ற்றி, அந்த நோய்களை நீக்க வழி காண்பதே உண்மை அறிவாகும். சாதாரண மக்கள் உயிர்த் துன்பமட்டு மன்றிப் பிற விலங்கு முதலியவற்றின் துன்பத்தையும் நீக்குதலே சிறந்ததென்பதை, ‘பிறரின் நோய்’ என உயர்திணையால் குறியாது, ‘பிறிதின் நோய்’ என்று அஃறிணையாலே குறிக்கின்றார் சங்க காலத்து முல்லைக்குத் தேரும் மயிலுக்குப் போர்வையும் கொடுத்த பாரியும், பேகனும் இக்குறளுக்கு இலக்காகி நிற்கிறார்களன்றோ! இவ்வாறு அறிவென்பது உலகில் வாழும் எல்லா உயிர்களையும் ஒத்து. நோக்குவதே என்பதும்