பக்கம்:கவிதையும் வாழ்க்கையும்.pdf/334

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

குறள்

337


அவற்றால் பயன் உண்டா? இதை எண்ணித்தான் திருவள்ளுவர் வாழ்க்கைக்கு ஏற்றதாக நாமும் உலகமும் வாழ வழி காட்டும் தன்மைத்தாக—எல்லாவுயிரும் வேறுபாடு காணுத வாழ்வைத் தருவதாக இருக்கும் கல்வியைக் கற்க வேண்டுகிறார். ‘கற்பவை கற்க’ என்று கூறி, அவற்றையும் மேற்போக்காகப் படியாமல், ‘கசடு அறக் கற்க’ வேண்டும் என்கின்றார். பின்பு எவ்வாறு வாழக் கற்கிறார்களோ, அதற்கு ஏற்றாற்போலவே வாழ்ந்துகாட்ட வேண்டும் என்கின்றார். படிப்புக்கும் வாழ்வுக்கும் தொடர்பு இல்லையென்று யாரும் சொல்ல முடியாதே! உயிருக்காகக் ‘கற்க’, என்கின்றார். முன்னரும் வள்ளுவர்-இத்தகைய பொதுநலக் கருத்துக்களைக் குறிக்கும்போது, தனி மனிதனை மட்டும் குறியாது, ‘உயிர்’ என்றே பொதுப்படையாகக் கூறினர். இங்கும்,

‘எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்
கண்என்ப வாழும் உயிர்க்கு.’ (குறள். 392)

என்று உயிர்மேல் கல்வியை ஏற்றியே பேசுகின்றார். ‘மனிதனல்லாப் பிறவுயிர்களும் கற்றுப் பேசுமா!’ என்ற ஐயம் எழலாம். அவை கற்கின்றனவோ, அன்றி உணர்கின்றனவோ, நாமறியோம். ஆனல், பிற உயிர்களே-புல் முதல் மாடு வரையில் உள்ள உயிர்களே—மனிதனுக்கு அவனிடை வாழும் கற்றவனேக் காட்டிலும் எத்தனை எத்தனை உண்மைகளை அன்றாடம் உணர்த்திக் கொண்டேயிருக்கும் நல்லாசிரிய நிலையில் அமைகின்றன என்பதை மறுப்பார் யார்?

கல்வி கற்பது உலகை வாழ்விப்பதற்கேதான். மேலே அறிவு, அன்பு ஆகியவை எப்படி உலகை ஒத்து நோக்கி வாழ வழி காட்டிகளாய் அமைவதை பார்த்தோமோ, அதே நிலையிலேதான் கல்வியும் அமைகின்றது. உலக வாழ்க்கையே தன் வாழ்க்கையென்று கருதுவதுதான் கல்வியின் சிறப்பு. அந்த ஒன்றினையேதான் கற்றவர் விரும்புவர். இங்கும் வள்ளுவர் பிறர் இன்புறக் காண்பதென்று கூருது உலகம் இன்புறுவதென்றே எல்லா உயிர்கள் மேலும் இன்பத்தை ஏற்றிக் கூறுவது காணத்தக்கது. அவர் கூறுவது இதுதான்;