பக்கம்:கவிதையும் வாழ்க்கையும்.pdf/340

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

குறள்

343


கேள்விச் செல்வர், சொற்செல்வர் போன்ற பல செல்வர்கள் வள்ளுவரின் குறள் மூலம் நமக்கு அறிமுகமாகின்றார்கள். செல்வம் இவ்வுலகுக்கு இன்றியமையாத ஒன்று என்பதை மறுப் பாரில்லை. அதிலும் பொருட் செல்வம் இன்றி இவ்வுலகில் மக்கள் வாழ முடியாது என்பது உண்மை. இதையும் திருவள்ளுவர் நன்கு கூறுகின்றார். பொருளிலார்க்கு இவ் வுலகம் இல்லை, என்று அவர் உலகின் இயல்பை நன்கு அறிந்து காட்டுகின்றார். ஆனால், அதே வேளையில் அப்பொருட் செல்வத்தைப் பற்றியும், அதனால் பெறவேண்டிய பயன் பற்றியும் கூறும்போது,

'ஈத்துவக்கும் இன்பம் அறியார்கொல் தாம்உடைமை
வைத்திழக்கும் வன்க ணவர்?’ (குறள். 228)

என்று வினவுகின்றார். பொருளால் பெற்ற இன்பம் மற்றவருக்குக் கொடுத்தலே என்பது அவர் கருத்து. செல்வம் பெற்றுச் சிறந்து வாழ்தலை அவர் தவறு என்று குறிக்கவில்லை; குறிக்கவுமாட்டார். செல்வத்தாலாகிய அரசனையும், அவன் செல்வத்தைப் பெருக்கவேண்டிய வழித்துறைகளையும் பற்றி வகுத்துக் கூறும் வள்ளுவனார், அச்செல்வத்தை வேண்டா வென்று கூறமாட்டார். ஆனல் அச் செல்வத்தால் உண்டாகிய பயனை நினைக்கும்போது அவர் திட்டமாக வழி வகுப்பார். பெற்றது கொண்டு தாமும் வாழ்ந்து, பிறரையும் வாழ்விப்பதே செல்வர் கடன்; அதை மறந்து, 'நமக்கே செல்வம்' என்று செம்மாப்பவராயின், அவரை 'வன்கண்ணவர்’ என்று கூறவும் பின்அடைய மாட்டார். மற்றவர்களுக்குப் பயன்படாத செல்வத்தை நினைத்துத்தான் போலும்,


‘அருட்செல்வம் செல்வத்துட் செல்வம், பொருட்செல்வம்
பூரியார் கண்ணு முள.' (குறள். 241)

என்று எடுத்துக் காட்டுகின்றார்! எனவே, பொருட் செல்வத்தின் பயன், தாமும் உண்டு, மற்றவரையும்—மற்றவற்றையும் —வாழ்விப்பதேயாகும்.