பக்கம்:கவிதையும் வாழ்க்கையும்.pdf/349

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

352

கவிதையும் வாழ்க்கையும்


ஆனால், ஒன்றைப் பழித்து, மற்றதைப் பாராட்டும் பண்பாடு அவரிடம் காண இயலவில்லை. ஒன்றைச் சீராட்டிப் பேசுவதற்காக மற்றொன்றைக் குறைக்கத்தான் வேண்டும் என்னும் நியதி உன்டோ? இல்லையே! தாம் கூறவேண்டிய பொருள்பற்றி எத்துணைச் சிறப்பாக வேண்டுமானலும் பேசலாம். ஆனால், அதற்காக மற்றொன்றைக் குறை கூறி, ‘அதனினும் இது உயர்ந்தது’ என்று கூற வேண்டா. அவ்வாறு கூறுவது வாழும் மனித சமுதாயத்தின் அடிப்படைக் கொள்கையும் அன்று. இன்று அவ்வாறு பேசுபவர் பலர் இருப்பினும், அவர் வாய்ச் சொல்லே பாராளும் சொல்லாய் அமைவதுபோலக் காணப்படினும், நீண்ட மனித வாழ்வின் வரலாற்றில் அவை யெல்லாம் நீர்க் கோல வாழ்வாகி அழியும். ஆனால், வேறுபாடு காணாது அனைத்தையும் தழுவிச் செல்லும் வாழ்க்கை நெறி என்றென்றும் வாழும். இந்த வகையிலேதான் மக்கள் வாழ்க்கையைத் தழுவிச் செல்கின்றார் இளங்கோவடிகள்.

ஆனால், சீத்தலைச் சாத்தனாரோ, சங்ககாலப் புலவராயினும், இளங்கோவடிகளுடன் நெருங்கிப் பழகியவராயினும் எப்படியோ அவர் உள்ளத்தில் சமயக் காழ்ப்பு தோன்றி விட்டது. அவர் சமயம் பெளத்தம் என்பதை நூலைப் பயில்பவர் அறிந்துகொள்வர். சிலப்பதிகாரம் கொண்டு இளங்கோவடிகளது சமயத்தைத் திட்டமாக அறிந்துகொள்ள இயலாது. ஆனால், அதே சமயத்தில் எழுந்த மணிமேகலையைக் கொண்டு, அதன் ஆசிரியர் சமயத்தை அறிந்துகொள்ள முடிகின்றது. அதனுடன் அவர் தம் சமயத்தை மட்டும் ஏத்திப் பாராட்டியிருந்தாலும் தீதில்லை. தேவையில்லாத ஒன்றைத் தாமே வலியப் புகுத்தி, சமயக் கணக்கர் தம் திறம் மணிமேகலையிடம் காட்டியதாக, ஒவ்வொரு சமயத்தின் கொள்கையைப் பற்றியும் கூறி, அவற்றிற்கு ஒவ்வொரு குற்றம் கற்பித்து, அனைத்துக்கும் மேலாகப் பெளத்த சமயந் தான் சிறந்தது என நிலைநிறுத்த முயல்கின்றார் அவர். நூலில் அவர் வெற்றி பெற்றாரோ இல்லையோ என்று நாம் கவலைப்பட வேண்டா. அவர்தம் நூல் தன் வாழ்வில் ஒருபடி தாழ்ந்து விட்டது என்பதை நாம் மறுக்கமுடியாது. தமிழ்நாட்டில் முதல்