பக்கம்:கவிதையும் வாழ்க்கையும்.pdf/350

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

காப்பியங்கள்

353


முதல் சமயக் காழ்ப்பினை—வேறுபாட்டை—வெறுப்பை—ஊன்றிய நூல் மணிமேகலை என்பது அறிஞர் முடிவு. அந்த நிலையில் எப்படி இலக்கியம் ஓங்கும்? எவ்வுயிரும் ஒத்து நோக்கும் உய்ர்ந்த பண்பின் அடிப்படையிலிருந்து விலகிய எந்த நூலும் வாழ முடியாது என்ற முடிபை மேலே கண்டிருக்கிறோம். அந்த உண்மை இந்த நூலுக்கும் பொருந்துகின்றது. எனினும், இதில் உள்ள சில வாழ்க்கைத் தத்துவங்களை ஒட்டியும், இது மறைந்த மற்றவற்றைப் போலக் கெட்டொழியாது ஓரளவு. உயிர் வாழ்ந்து வருகின்றது. இது வாழ்க்கை முறைக்கு ஆற்றும் தொண்டை உடன் காண்போம்.

சீவக சிந்தாமணி ஒர் ஒப்பற்ற வீரனைப்பற்றிப் பாடும் நூல். அதில் சமயக் காழ்ப்போ, வேறுபாடோ அதிகமில்லை. நல்ல வேளை! திருத்தக்க தேவர் பிற சமயக் கொள்கைகளை வலியப் புகுத்தி, அவற்றைக் குறை கூறவில்லை; சீவகன் மணங்களைத் தொடர்ந்து கூறி, இறுதியில் தம் சமய உண்மையின் ஏற்றத்தை மட்டும் பாடிக் காவியத்தை முடிக்கின்றார். இதிலும் பல வாழக்கை உண்மைகள் பேசப்படுகின்றன. அவற்றையும் தொடர்ந்து காண்போம். இந்த மூன்று காப்பிய நூல்களைத் தவிர, எத்தனையோ காப்பியங்கள் அன்றுதொட்டு, நேற்றுவரை வந்துகொண்டேயிருக்கின்றன. ஐம்பெருங் காப்பியத்துள் மற்றைய வளையாபதி, குண்டலகேசி என்ற இரண்டும், ஐஞ்சிறு காப்பியங்களும் காலத்தால் பிந்தியவையாம். அவற்றிற்குப்பின்—ஒன்பதாம் நூற்றாண்டுக்குப் பிறகு —எத்தனையோ காப்பியங்கள் உண்டாயின. பிற்காலத்திலும் பல காப்பியங்கள் எழுந்தன. அவற்றுள் பெரும்பாலன, ஒரு சமயச் சார்பு பற்றியே எழுந்தனவாகலின், இத்துணை நாள்கள் நெடிதுயிர்த்து வாழ முடியவில்லை; அவ்வச் சமயம் நாட்டில் வாழும் காலத்திலே வாழ்ந்து, வீழும் காலத்துத் தாமும் வீழ்ந்தன. மேலும், அவையெல்லாம் மக்களது சாதாரண வாழ்வோடு பொருந்தாது, வேறு எங்கோ தனிப் பாதையில் செல்வனவாய் அமைந்து விட்டமையின், மக்கள் வாழ்வில் இடம் பெறாது, மறைந்து ஒழிந்தன. அவற்றுள் ஒருசில