பக்கம்:கவிதையும் வாழ்க்கையும்.pdf/353

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

356

கவிதையும் வாழ்க்கையும்


முற்படுவான். அதுபோன்றே, பிறவியின் எல்லையில் தன் தவறுகளை எல்லாம் எண்ணி வருந்தின், மறு பிறப்பில் அத்தவறுகளை இழைக்கமாட்டான் என்பார்கள், மறு பிறவியில் நம்பிக்கை உடையவர்கள். இச் சிலப்பதிகாரமே பிறவிகள் பல உண்டென்பதை உணர்த்தி, அவையும் ஊழ்வினையின் வழி உயர்ந்தும் தாழ்ந்தும் நிற்கும் என்பதைக் காட்டிச் செல்லும் நூலன்றோ? ஆகவே, அவனை அறியாமலே அவன் இறுதி நாளில் அந்தப் பிறவியில் செய்த பிழைகளை எண்ணி வருந்துகின்றான். அதே நிலையிலேதான், கண்ணகியும் வருந்துகிறாள். அவளுக்கு வாழ்வின் இன்பமாகிய இல்லறம் ஏமாற்றமடைய வேண்டிய ஒன்றா யமைந்துவிட்டது. இல்லற வாழ்வு என்பது தலைவனோடு கூடி இன்பம் பெறுதல்ஒன்றிலே மட்டும் அமைந்து விடவில்லை. அப்படி அந்த ஒன்றிலே மட்டும் வாழ்வைக் கழித்தால் அது தமக்கே இறுதியை விளைவிக்கும் என்பதைச் சிந்தாமணி ஆசிரியர், சச்சந்தனை முன்னிறுத்தி நமக்குக் காட்டுகின்றார். ஆகவே, பிறர்க்காகவும் இல்லறம் அமைகின்றது. செல்விருந்து ஒம்பி, வருவிருந்து பார்க்கும் வாழ்வு இல்லறவாழ்வு. இவற்றையெல்லாம் அமைத்து, கணவனைப் பிரிந்தமையின் அனைத்தையும் இழந்த கண்ணகி வாயிலாக,

‘அறவோர்க் களித்தலும் அந்தணர் ஒம்பலும்
துறவோர்க் கெதிர்தலும் தொல்லோர் சிறப்பின்
விருந்தெதிர் கோடலும் இழந்த என்னை?’
(கொலைக் 71.73)

என்று காட்டி இவ்வாழ்வின் நிலையினை விளக்குகின்றார்.

புற வாழ்வைப்பற்றி வஞ்சிக்காண்டம் விரித்துரைக்கின்றது. போர், வீரம், நிலையாமை என்பன அப்பகுதியில் பேசப்படுகின்றன. சேரன் செங்குட்டுவன், பத்தினிக்குப் படிமம் எடுப்பதற்கென இமயம் நோக்கிச் சென்று, அங்கே தமிழரசரைப் பழித்துரைத்த கனகவிசயரை வெற்றி கொண்டு வந்த வரலாற்றை விளக்கிக் காட்டும் பகுதியில், தமிழர்தம் போர் முறையும் பிறவும் பேசப்படுகின்றன. இறுதியில் விழாவாற்று முன் தன் வீரத்தை இகழ்ந்த தமிழ் வேந்தரின்மேல் செங்குட்டு