பக்கம்:கவிதையும் வாழ்க்கையும்.pdf/355

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

358

கவிதையும் வாழ்க்கையும்


‘யானோ அரசன்! யானே கள்வன்!
மன்பதை காக்கும் தென்புலம் காவல்
என்முதற் பிழைத்தது! கெடுகஎன் ஆயுள்!’

(வழக்கு. 75-77)

என்று அரசு கட்டிலில் வீழ்ந்து உயிர் துறந்து வளைந்த செங்கோலை நிமிர்த்தி வைத்தான். அருகிலிருந்த பாண்டி மாதேவி, ‘கணவனை இழந்தோர்க்குக் காட்டுவது இல்’ என்று வீழ்ந்து, கணவனுடன் மாய்ந்து கற்பரசியானாள். இவ்வாறு வாழ்வின் உண்மைகளையெல்லாம் உள்ளடக்கி, உணர்த்தும் சிலப்பதிகாரம் என்னும் இக் காப்பியம் ஒரு வாழ்விலக்கியந்தானே? யாதொரு வேறுபாடுமற்ற சமுதாயத்தை அமைக்கும் பண்பாட்டின் அடி ஒற்றிச் செல்லும் இக்காவியம் என்றும் வாழும் என்பது உறுதி.

இனி, அடுத்து மணிமேகலை மேலே கண்டபடி சமயக் காழ்ப்பைக் வளர்த்தாலும், இன்றளவும் வாழ்வதற்குக் காரணம், அது காட்டும் சில வாழ்க்கைத் தத்துவங்கள்தாம். மணிமேகலை புத்த சமயத்தை விளக்கும் துறவு நூல் என்றாலும், இல்லற வாழ்வின் ஏற்றமும் அதில் பேசப்படுன்றது. அதனுடன் மக்கள் வாழ்வுக்கு இன்றியமையாது வேண்டப் பெறும் உணவுதான் அக் காப்பியத்தின் உயிர்நாடி. உணவின் அடிப்படையிலேதான் அக்காப்பியமே உருவாகிறது. மணிமேகலை கையில் உள்ள அமுதசுரபியின் வரலாறே நூல் முழுவதிலும் சுற்றி வட்டமிடுகின்றது. ‘உண்டி முதற்றே உணவின் பிண்டம்’ என்றபடி, அழியாது வாழ உதவும் உணவை முதலாவதாக அமைத்துப் பாடின், எந்தக் கவிதைதான் உயிர் வாழாது? அதிலும், அந்த உணவைத் தனக்கென வைத்துக்கொள்ளாது, எல்லோருக்கும் வாரி வழங்கும் வகையில் அமையின், அந்நூல் வாழாது போகுமா? உலகத்தில் மழையின்றேல் உண்டாகும் கேடுகளையெல்லாம் விளக்கி, அக்கேட்டின் இடையில், பழுமரம் தோன்றிற்போல அமுதசுரபி தோன்றி மக்களுக்கு எத்துணை இன்பம் உண்டாகிற்று என்பதைக் காட்டும்போது மகிழ்ச்சி பிறக்கிறதன்றோ! நாடு வறங்கூரினும் இவ்வோடு வறங்