பக்கம்:கவிதையும் வாழ்க்கையும்.pdf/357

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

360

கவிதையும் வாழ்க்கையும்


அழிந்தோ போகக் கூடியது. உயிர் யாதொரு மாற்றமும் பெறாது நிற்பது. நிலையற்ற மாற்றங்கள் பல நிகழினும், உண்மையில் உயிர் மாற்றமற்ற ஒன்று என்பதுதான் உண்மை. திருமூலர் கூறியபடி 'உடம்பார் அழியில் உயிரார் அழிவர்'. இதில் ‘அழிவர்’ என்பது நிலை கெடுவதைத்தான் குறிக்கும். உயிர் உடம்போடு கூடிய வழியில்தானே அது பல்வேறு துறையில் பழகி வளர முடிகின்றது? ஆனால், இரண்டும் பிரியின் நிலையற்று, இடமறியா வகையில் எங்கோ இருக்கின்றன. எனவேதான், உடலொடு கூடிய வழியே உயிரும்,வளர்கின்றது என்பது புலனாகின்றது. இவற்றையெல்லாம் எண்ணித்தான் போலும் சாத்தனர், ‘ஆருயிர் மருந்து’ என்று அதை உயிரின் மேல் ஏற்றிச் சொல்கின்றார்!

இன்னும் மக்கள் மனத் தத்துவத்தைச் சாத்தனார் நன்கு சுட்டிக் காட்டுகின்றார். அதற்கு அவர் சமய நெறிப்படி முன்னைப் பிறவிகள் காரணம் என்பார். துறவில் நிலைத்த கொள்கையுடைய மணிமேகலை, உதயகுமரனைக் கண்ட பொழுதுமட்டும் உணர்வு தடுமாறுகிறாள். இந்த உள்ள நிலையைச் சாத்தனர் விளக்கி, இதற்குக் காரணம், அவள் முன்னைப் பிறவியில் அவனுடைய மனைவியாய் இருந்ததே என்பதையும் காட்டுகின்றார். உள்ளத்தால் செயல்கள் நிகழும் என்பதை அவன் இறந்தபின் மணிமேகலை உள்ள நெகிழ்வின் மூலம் காட்டுகின்றார், அறநெறி பிறழா அரசர்கள் வாழ்ந்து நின்ற வரலாறுகளைக் காட்டி, அவற்றின் மூலம் நாட்டில் கொடுங்கோன்மையே இல்லையாகச் செய்கின்றார் அவர்.

ஆதிரையின் கணவனகிய சாதுவனை நாகர் நாட்டிற்குக் கொண்டு வந்து, நாகர் முன் நிறுத்தி, அவர்களுக்கு அறிவுறுத்துவது போன்று, கள் உண்ணலையும் புலால் உண்ணலையும் தவிர்க்கவேண்டும் என்று அவர் காட்டுவது நலம் சிறந்ததாகும். இங்குள்ள மனிதருட் சிலர் அத்தகைய இழிநிலையில் இருத்தாலும், அவர்களை முன் நிறுத்திப் பேசின் தவறும் மாறுபாடுகளும் உண்டாகும் என்று கருதியே, அவ்வாறு நாகரை முன்னிறுத்தி நல்ல நீதிகளைக் கூறுகின்றார் போலும்!