பக்கம்:கவிதையும் வாழ்க்கையும்.pdf/359

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

362

கவிதையும் வாழ்க்கையும்



உள்ளம் தன்னில் உதிப்பன மூன்றும்
பத்தும் குற்றம்.”

என்று சாத்தனார் அவற்றை விளக்கிக் கூறும்போது, நாம் நம் மனத்தில் அவற்றை எண்ணி ஆராய்ந்து அக் குற்றங்கள் இல்லாமல் வாழ வேண்டும் என்று முடிவு செய்ய நினைக்கிறோம். இன்னும் இவ்வாறு பல அறிநெறிகளையும் வாழ்க்கை வகைகளை யும் காட்டும் திறன் சிறந்ததாகும்.

காஞ்சி என்னும் நிலையாமையைப் பற்றியும் சாத்தனார் குறிக்கின்றார். மணிமேகலை உதயகுமாரனுக்குக் கூறுவதாக நரை மூதாட்டி ஒருத்தியைக் காட்டி உரைக்கும் உரைகள் மனிதனைத் துறவு மனப்பான்மைக்கு இழுத்துச் செல்லுவனவாகும். நூலே துறவை உணர்த்த வந்த ஒன்றாதலின், துறவினைப் பற்றி அதிகமாய்ப் பேசுகின்றார். வாழ்விடை மக்கள் பலர் விரும்பாத அத்துறவை உணர்த்துவதும் அது சிறந்து வாழாமைக்கு ஒரு காரணமாகும். எனவே, சிலசில மாறுபாட்டுக் கொள்கைகளை விளக்கும் நூலாயினும், மக்கள் வாழ்வின் அடிப்படைக் கொள்கைகளையும் ஆங்காங்கே நன்கு விளக்கிக் கொண்டே செல்கின்றமை ஒன்றே இதுவரை மணிமேகலையை வாழ வைக்கின்றது.

இனி, மூன்றாவதாகிய சீவக சிந்தாமணியை நோக்குவோம். சீவக சிந்தாமணி காதற் காப்பியம் என்பர் சிலர். சிலர் துறவு நூல் என்பர். இப்படி எல்லாப் பொருளும் அதில் பொதிந்து கிடக்கின்றன; எனினும், அதை ஒரு சமய நூல் என்றே சொல்லலாம். சமண சமயத்தை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட நூல் அது. சமண முனிவராகிய திருத்தக்க தேவர் நல்ல முறையில் அந்நூலே எழுதியிருக்கின்றார், விருத்தப்பாவில் முதன்முதல் தமிழில் தோன்றிய பெருங்காப்பியம் அதுதான். தம் சமய உண்மையை நூலின் தொடக்கம் முதல், இறுதி வரையில் இடையிடையே காட்டிச் செல்கிறார் இறுதியாகிய முத்தி இலம்பகத்திலே தம் சமய உண்மைகளை நன்கு விளக்கி அறியாதாரும் அறிந்துகொள்ளும்படி செய்துள்