பக்கம்:கவிதையும் வாழ்க்கையும்.pdf/365

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

368

கவிதையும் வாழ்க்கையும்


கழுவேற்றங்களும், பிற கொடுமைகளும் நிகழ்ந்தன என அறிகின்றோம்.

சங்க காலத்திலே தமிழ்நாட்டில் சிறக்க வாழ்ந்த சமயங்கள், சைவம் வைணவம் என்ற இரண்டுமேயாம். பெளத்தமும் சமணமும் பிற நாடுகளிலிருந்து தமிழ்நாட்டில் குடியேறின. எனினும், இவையும் வரவேற்கப்பட்டுப் போற்றப்பட்டன. இந்த நான்கு பெருஞ்சமயங்களும் சிறுசிறு கிளைச் சமயங்களும் தம்முள் மாறுபடாது சங்க காலத்தில் வாழ்ந்து வந்தன. என்றாலும், எப்படியோ ஒன்றினைக் காட்டிலும் மற்றது மேலோங்க வேண்டும் என்று விரும்பிற்று. அவ் விருப்பின் பயனாகவே, நாட்டில் பலப்பல இன்னல்கள் தோன்றலாயின. சங்ககாலத்தை அடுத்துப் பெளத்தமும், அதை அடுத்துச் சமணமும், ஏழாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் சைவ வைணவ சமயங்களும் தலை எடுத்து ஒன்றை மற்றொன்று தாழ்த்தி வளரலாயின. ஏழாம் நூற்றாண்டில் மேலோங்கிய சைவமும் வைணவமும் இன்றுவரை நாட்டில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன.

தமிழ் நாட்டில் ஒரு காலத்தில் புத்த சமயம் மிகச் சிறந்த நிலையில் இருந்தது. என்றாலும், அதுபற்றிய இலக்கியங்கள் அதிகம் நாட்டில் இல்லை. மணிமேகலை ஒன்றுதான் பெளத்த இலக்கியம் என்று சொல்லக்கூடிய அளவில் வாழ்கின்றது. வேறு பெளத்த இலக்கியங்கள் அக்காலத்தில் தோன்றி வாழ்ந்தனவோ, நாமறியோம். எனினும், மணிமேகலை அத்துணை வேகமாக முதல் முதல் பிற சமயங்களின் திறம் கண்ட காரணமே அச்சமய இலக்கியங்களை மேலும் வளரவொட்டாமல் செய்துவிட்டது என்பர் ஆராய்ச்சியாளர்.

அடுத்து சமணம், தமிழ் நாட்டில் நன்கு வேரூன்றி வளர்ந்த சமயம். இன்றைக்கும் தமிழ்நாட்டில் பெரிய அளவில் சமணர்கள் வாழாவிடினும், மூலை முடுக்குகளிலெல்லாம் சமண சமயம் வாழ்ந்து வருகின்றது. அச் சமயத்துக்குப் பெருங்