பக்கம்:கவிதையும் வாழ்க்கையும்.pdf/372

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சமய இலக்கியங்கள்

375


'ஈர அன்பினர் யாதும் குறைவிலர்
வீரம் எம்மால் விளம்பும் தகையதோ?’

என்று அடியவர்தம் வாழ்வை வீர வாழ்வாகவே குறிக்கின்றார். ‘எது வரினும் வருக, அலது எது போயினும் போக.’ என்று கொடுமைக்குத் தலை வணங்காமல் வாய்மை வழிச் செல்லும் நல்லவராலேதான் நானிலம் நலம் பெறும் என்பது கண்கூடு. ஆங்கிலேயர் செய்த கொடுமைகளுக்கு அஞ்சித் தலை வணங்கி அண்ணல் காந்தி நின்றிருப்பாராயின், இந்நாடு நலம் பெற்று இருக்குமா? அது போன்றே மற்றத் தலைவர்களும் கொடுமைக்குத் தலைவணங்காராய் இருந்து, உரிமையை நிலை நாட்டினதை அரசியல் வாழ்வில் கண்டோம். சாதாரண வாழ்விலும் இதைத்தான் மக்கள் மேற்கொள்ள வேண்டுமென. அறிஞர் விரும்புகின்றனர். பொல்லாங்குக்கு அடிமையாகாது உண்மைக்குத் தலைவணங்கி நிற்றலே வாழ்வாகும். எதிர்ப்புக் கொடியதாயினும், அதை எதிர்த்துச் சாவதே மேல். அன்றித் தலை வணங்கி வாழ நினைத்தால், மனித சமுதாயமே-ஏன்?உயிர் இனமே நிலை கெட்டு ஒழியும். அதைக் கண்ணாரக் காணும் இருபதாம் நூற்றாண்டு நாகரிகத்தின் இடையிலே தான் நாம் வாழ்கின்றோம். இந்த உண்மையைத்தான் சமயம் பற்றிய கவிதைகள் நமக்கு வற்புறுத்துகின்றன.

தமிழ் நாட்டில் இச்சமயக் கவிதைகளின் வழியேதான் தம் வாழ்க்கை அனைத்தையும் புகுத்தி நின்றனர் கவிஞர். சமயத்தைப் பற்றியே கவலைப்படாத ஒரு காலம் தமிழ் நாட்டில் நெடுநாளைக்கு முன்னே இருந்ததுண்டு. எனினும், இடைக்காலத்தில் சமயமன்றி வேறு வாழ்க்கை இல்லை என்று கூறக்கூடிய அளவுக்குச் சமயம் மக்கள் வாழ்வில் இடம் பெற்றது. ஒருவன் சமயத்தைச் சேராது வாழ்வானாயின், அவனை மக்கள் வெறுக்கத் தலைப்பட்டார்கள். அத்தகைய இடைக்காலத்தில் எல்லாப் பொருளையும் சமயத்துள் அடக்கியே பேசினர். நாம் மேலே உலகத் தோற்றத்திலும் உயிர்த் தோற்றத்திலும் காட்டிய பல மேற்கோள்கள் சமயக் கவிதைகளிலிருந்து எடுத்தனவே. சமூக வளர்ச்சிக்கான மேலே